ஆந்திராவில் 2 ரெயில்கள் மோதி விபத்து: பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசாவுக்கு நேற்று இரவு பயணிகள் ரெயில் சென்றுகொண்டிருந்தது.

Update: 2023-10-30 04:43 GMT

அமராவதி,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து நேற்று இரவு பயணிகள் ரெயில் பாலசாவுக்கு சென்றுகொண்டிருந்தது. அந்த ரெயில் அலமந்தா - கன்கடப்பள்ளி இடையேயான தண்டவாளத்தில் சிக்னலுக்காக நின்றுகொண்டிருந்தது.

அப்போது, அதே தண்டவாளத்தில் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசாவின் ராயகடா நோக்கி மற்றொரு பயணிகள் ரெயில் வேகமாக வந்தது. இரு ரெயில்களும் ஒரே தண்டவாளத்தில் பயணித்த நிலையில் வேகமாக வந்த விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரெயில் சிக்னலுக்காக நின்றுகொண்டிருந்த விசாகப்பட்டினம் - பாலசாவு பயணிகள் ரெயில் மீது பின்புறத்தில் இருந்து மோதியது. இந்த கோர விபத்தில் 2 ரெயில்களின் பெட்டிகள் தடம்புரண்டன.

இந்நிலையில், இந்த ரெயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த 39 பேர் விசாகப்பட்டினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மனித தவறே இந்த விபத்துக்கு காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்