உத்தரபிரதேசத்தில் மோடி தேர்தல் பிரசாரம் தொடங்கினார்

உத்தரபிரதேச மாநிலத்தில் மோடி தேர்தல் பிரசாரம் தொடங்கினார். ஊழல் சக்திகளை விலக்கி வைக்க அவர் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

Update: 2017-02-05 00:15 GMT
மீரட்,

உத்தரபிரதேச மாநிலத்தில் மோடி தேர்தல் பிரசாரம் தொடங்கினார். ஊழல் சக்திகளை விலக்கி வைக்க அவர் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

உத்தரபிரதேசத்தில் மோடி

உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இங்கு ஆட்சியை கைப்பற்றுவதில் பாரதீய ஜனதா முழுமூச்சுடன் களம் இறங்கி உள்ளது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று அங்கு தேர்தல் பிரசாரம் தொடங்கினார். முதல் கட்ட தேர்தலை 11-ந் தேதி சந்திக்கிற மீரட்டில், பாரதீய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டசபை தேர்தலில் ஊழலுக்கு எதிராக பாரதீய ஜனதா களம் இறங்கி இருக்கிறது. (ஊழலை குறிப்பிடுவதற்காக ‘ஸ்கேம்’ என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்திய பிரதமர் மோடி, ஒவ்வொரு எழுத்துக்கும் விளக்கம் சொன்னார். எஸ் என்பது சமாஜ்வாடி கட்சி, சி என்பது காங்கிரஸ் கட்சி. ஏ என்பது அகிலேஷ் யாதவ். எம் என்பது மாயாவதி என விவரித்தார்.)

ஊழல் சக்திகள்

இந்த ஊழல் சக்திகளை உத்தரபிரதேசத்தில் இருந்து விலக்கி வையுங்கள். அப்படி அவர்களை விலக்கி வைக்காத வரையில், உத்தரபிரதேசத்திற்கு நல்ல காலம் பிறக்காது.

வளர்ச்சியை செயல்திட்டமாக கொண்டுள்ள பாரதீய ஜனதா ஆட்சி வேண்டுமா, கிரிமினல்களுக்கு புகலிடம் கொடுத்து, ஓட்டு வங்கி அரசியல் செய்து, நிலம், சுரங்க மாபியாக்களை ஊக்குவிக்கிறவர்களின் ஆட்சி வேண்டுமா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

ஒரே இரவில் நண்பர்கள்

நேற்று வரை பரம எதிரி களாக திகழ்ந்தவர்கள் (சமாஜ்வாடி கட்சியும், காங்கிரஸ் கட்சியும்), ஒரே இரவில் எப்படி நண்பர்களாக மாற முடிந்தது?

தங்களை தங்கள் சொந்த பலத்தில் காப்பாற்றிக்கொள்ள இயலாதவர்கள், எப்படி இந்த மாநிலத்தை காப்பாற்றப்போகிறார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள்.

இந்த மாநிலத்துக்கு நான் எவ்வளவோ செய்ய விரும்புகிறேன். ஆனால் வளர்ச்சிப்பணிகளுக்கு இடையூறாக இருந்து கொண்டு, மாநில அரசு பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகிறது. மாநிலத்தில் சட்டம், ஒழுங்கை கட்டிக்காப்பதில் மாநில அரசு தோற்றுப்போய் விட்டது.

ஊழல் எதிர்ப்பு போர்

உத்தரபிரதேசம்தான் என்னை பிரதமராக ஆக்கியது. நான் அந்த மாநில மக்களுக்கு பட்ட கடனை தீர்க்க வேண்டும். தற்போது இருப்பதுபோல மாநிலத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ள ஒரு அரசு அமையாமல், மத்திய அரசுடன் கை கோர்த்துக்கொண்டு செயல்படுகிற ஒரு அரசு அமைகிறபோதுதான், மாநிலம் வளர்ச்சி பெறும்.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக 1857-ம் ஆண்டு மீரட்டில் இருந்துதான் கிளர்ச்சி தொடங்கியது. எனவேதான் ஊழலுக்கு எதிரான போரை இங்கிருந்து தொடங்குவதற்கு நான் முடிவு செய்தேன்.

வீழ்த்த ஒரு புயல்

தேர்தலில் போட்டியிடுவதற்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்து, அறைகளை ரூபாய் நோட்டுகளால் நிரப்பினார்கள். ஆனால், நவம்பர் 8-ந் தேதி இரவு 8 மணிக்கு பிறப்பித்த உத்தரவின் மூலம் அந்த பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்ய வைத்ததின் காரணமாக அவர்கள் எல்லாரும் கலங்கிப்போய் உள்ளனர்.

அவர்கள் அனைவரும் எனக்கு எதிராக அணி சேர்வார்கள் என்பது எனக்கு தெரியும். மோடி அவர்களை கொள்ளையடித்ததால், மோடியை அவர்கள் வீழ்த்துவதற்காக ஒரு புயலை கிளப்புவார்கள்.

ஓய்வு எடுக்க மாட்டேன்

ஊழல் முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறீர்களா? கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என கருதுகிறீர்களா? நான் அதை செய்து கொண்டிருக்கிறேன். நான் ஓய்வும் எடுக்க மாட்டேன். இந்த கொள்ளையர்களை ஓய்வு எடுக்கவும் விட மாட்டேன். அவர்கள் எத்தனை பேர் என்னை எதிர்ப்பதற்காக சேர்ந்து வந்தாலும் பரவாயில்லை. எனது போர் ஓயாது. மோடி நிற்க மாட்டார்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்