ஜெயலலிதா சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் 1 வாரத்தில் தீர்ப்பு

ஜெயலலிதா சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறினர்

Update: 2017-02-06 05:58 GMT
புதுடெல்லி,


மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனிக்கோர்ட்டு அவர்களுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது. தீர்ப்பை எதிர்த்து 4 பேரும் கர்நாடக  ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். இதை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி குமாரசாமி 4 பேரையும் விடுதலை செய்தார்.

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. நீதிபதிகள் பினாகி சந்திரா, அமித்தவ ராய் ஆகியோர் கொண்ட பெஞ்ச் அப்பீல் மனுவை விசாரித்தது. வக்கீல்கள் வாதம் முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

ஆனால் தீர்ப்பு வெளியாகாமல் ஒரு வருடமாக நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஜெயலலிதா மரணம் அடைந்தார். இதற்கிடையே அ.தி.மு.க. பொதுச்செயலாளரான சசிகலா முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் விரைவில் முதல்-அமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

இந்த நிலையில் அப்பீல் வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அறிவித்தனர்.இந்த வழக்கில் ஆஜரான கர்நாடக அரசின் மூத்த வக்கீலான துஷ்யந்த் தவே இன்று சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதிகள் முன் ஆஜரானார்.

ஜெயலலிதா, சசிகலா அப்பீல் வழக்கில் நீண்ட காலமாக தீர்ப்பு வழங்கப்படாமல் உள்ளது என்று அவர்களது கவனத்துக்கு கொண்டு சென்றார். அதற்கு பதில் அளித்த நீதிபதிகள், “இன்னும் ஒரு வாரம் பொறுத்து இருங்கள்” என்று சூசகமாக தெரிவித்தனர். எனவே இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு  வழங்கப்படுகிறது.

மேலும் செய்திகள்