பணத்துக்காக ‘அபாயகரமான கழிவுகளை இந்தியாவில் கொட்ட அனுமதிப்பதா?’ மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு காட்டமான கேள்வி

வெளிநாடுகளின் அபாயகரமான கழிவுகளை இந்தியாவில் கொண்டு வந்து கொட்டுவதற்கு அனுமதிப்பதா? என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு காட்டமான கேள்வி எழுப்பியது.

Update: 2017-02-19 23:15 GMT

புதுடெல்லி,

மக்களுக்கு ஏற்படுகிற பாதிப்புகளை பற்றி கவலைப்படாமல், பணம் கிடைக்கிறது என்பதற்காக வெளிநாடுகளின் அபாயகரமான கழிவுகளை இந்தியாவில் கொண்டு வந்து கொட்டுவதற்கு அனுமதிப்பதா? என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு காட்டமான கேள்வி எழுப்பியது.

தொண்டு அமைப்பு வழக்கு

சுப்ரீம் கோர்ட்டில் அறிவியல் ஆராய்ச்சி அமைப்பு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், ஒரு பொது நல வழக்கு தொடுத்துள்ளது.

இந்த வழக்கில் வெளிநாடுகளின் அபாயகரமான கழிவுப்பொருட்களை, கழிவு நீரை இந்தியாவிற்கு கொண்டு வந்து, கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய். சந்திரசூட், எஸ்.கே. கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்குதாரர் தரப்பில் வக்கீல் சஞ்சய் பரேக் ஆஜராகி வாதிட்டார். அவர், ‘‘வெளிநாடுகளின் அபாயகரமான கழிவுகளையும், அசுத்தமான பொருட்களையும் இந்தியாவில் கொண்டு வந்து கொட்டுவதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்குகின்றனர். இதன் காரணமாக மக்களின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது’’ என வாதிட்டார்.

அத்துடன், ‘‘சுப்ரீம் கோர்ட்டு பலமுறை உத்தரவிட்டும்கூட, விதிகளும், நெறிமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை’’ என்றும் கூறினார்.

நீதிபதிகள் காட்டம்

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:–

இந்த பிரச்சினை முக்கியமான பிரச்சினை. நாட்டு மக்கள் பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். எனவே விதிகளை அதிகாரிகள் புறந்தள்ளி விட முடியாது.

நீங்கள் (மத்திய அரசு) பிற நாடுகளின் கழிவுகளை இங்கு கொண்டு வந்து கொட்டுவதை அனுமதிக்கிறீர்கள். இதன்மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கிறீர்கள்.

இந்த வழக்கை நாங்கள் விட்டு விட முடியாது. இது மிகவும் முக்கியமானது. நீங்கள் ஏதாவது செய்துதான் ஆக வேண்டும்’’ என கூறினர்.

அபாயகரமான கழிவுகளை வெளிநாட்டினர், இந்தியாவில் கொண்டு வந்து கொட்டுவதையும், அது தொடர்பான தற்போதைய பிரச்சினைகளையும் வழக்குதாரர் வக்கீல் விளக்கினார்.

கூடுதல் அவகாசம் கிடையாது

அதைத் தொடர்ந்து மத்திய அரசு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கு மத்திய அரசின் சார்பில் கூடுதல் அவகாசம் கேட்டபோது, நீதிபதிகள் தர மறுத்து விட்டனர்.

அப்போது நீதிபதிகள், ‘‘நீங்கள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகளை ஆராய்ந்து பாருங்கள். அதன்பின்னர் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் பாருங்கள். அதன்பிறகு விரிவான பிரமாண பத்திரத்துடன் வாருங்கள்’’ என கூறினர். வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை நீதிபதிகள் அடுத்த மாதம் 31–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதற்கு முன்பாக 1989–ம் ஆண்டு அலாஸ்காவில் (அமெரிக்கா) இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான வகையில் எண்ணெய் படலம் ஏற்பட காரணமான வெளிநாட்டு கப்பல் ஒன்றை குஜராத்துக்கு கொண்டு வந்து நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி, உடைக்கப்படுவதற்கு அனுமதி வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது.

இந்த வழக்குதாரரின் முறையீடுதான் அதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்