சிறை தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க தேர்தல் கமி‌ஷன் ஆதரவு

சிறை தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பதற்கு தேர்தல் கமி‌ஷன் ஆதரவு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

Update: 2017-03-20 23:45 GMT

புதுடெல்லி

சிறை தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பதற்கு தேர்தல் கமி‌ஷன் ஆதரவு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் மனு

அரசியல்வாதிகள் தீவிரமான குற்றவழக்குகளில் சிறை தண்டனை பெற்றால் அவர்கள் 6 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டால் உடனடியாக அவர்கள் தங்கள் பதவியை இழந்துவிடுவார்கள் என்ற தேர்தல் கமி‌ஷனின் உத்தரவு தற்போது அமலில் உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜனதா தலைவர் அஷ்வினி உபாத்யாய் என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நபர் தேர்தலில் போட்டியிடுவதை அனுமதிக்கக் கூடாது. தீவிரமான குற்ற வழக்குகளில் சிறை தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

தேர்தல் கமி‌ஷன் ஆதரவு

முன்னாள் தலைமை தேர்தல் கமி‌ஷனர் ஜெ.எம்.லிங்டோ, மக்கள் நல அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனம் ஆகியோர் சார்பிலும் இதேபோன்ற மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, இதுதொடர்பாக தேர்தல் கமி‌ஷன் தனது கருத்தை தெரிவிக்கவும் உத்தரவிட்டது.

அதன்படி தேர்தல் கமி‌ஷன் தனது பதில் மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில், அரசியல்வாதிகள் மீதான வழக்குகளை விரைவாக விசாரணை நடத்தி முடிவுக்கு கொண்டுவருவதற்கும், சிறை தண்டனை விதிக்கப்பட்ட அரசியல்வாதிகள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பதற்கும் ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளது.

இந்த வழக்கை விசாரணை நடத்துவதற்கான அமர்வு இன்னும் அமைக்கப்படவில்லை. அமர்வு அமைக்கப்பட்டதும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்