சமூக மற்றும் கல்வியில் பின்தங்கியவர்களுக்கு புதிய ஆணையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினருக்கான தேசிய ஆணையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2017-03-23 15:43 GMT
புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூடியது.  இதில், சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினருக்கான தேசிய ஆணையம் என்ற புதிய ஆணையம் ஒன்றை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.  அதற்கேற்றபடி, அரசியலமைப்பில் திருத்தம் செய்து பிரிவு 338பி சேர்ப்பதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த ஆணையத்திற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்குவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும்.  இந்த ஆணையம் ஒரு தலைவர், ஒரு துணை தலைவர் மற்றும் 3 உறுப்பினர்கள் ஆகியோரை கொண்டிருக்கும்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம் 1993 சட்டத்தினை வாபஸ் பெற்றுள்ள அமைச்சரவை, அச்சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட அந்த ஆணையத்தினையும் கலைத்து விட்டது.  தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரின் புகார்களை கவனிப்பதற்காக தேசிய ஆணையம் உள்ளது.

இதேபோன்று, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் குறைகளை கேட்பதற்காக, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தினை அனுமதிக்க, அதற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

சமூக நீதி மற்றும் அதிகார அமைச்சகத்தின் கீழ் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம் என்ற சட்டரீதியான அமைப்பு இருந்து வந்தது.  இதற்கான சட்டம் கடந்த 1993ம் ஆண்டு ஏப்ரல் 2ல் அமலுக்கு வந்தது.

மேலும் செய்திகள்