வி‌ஷம் குடித்து தற்கொலை செய்வதை தவிர வேறு வழி இல்லை டெல்லியில் தமிழக விவசாயிகள் மனக் குமுறல்

மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்வதை தவிர வேறு வழி இல்லை என்று டெல்லியில் 11–வது நாளாக போராடும் தமிழக விவசாயிகள் தெரிவித்தனர்.

Update: 2017-03-24 22:30 GMT

புதுடெல்லி,

மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்வதை தவிர வேறு வழி இல்லை என்று டெல்லியில் 11–வது நாளாக போராடும் தமிழக விவசாயிகள் தெரிவித்தனர்.

வறட்சி நிவாரணம்

வார்தா புயல், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைக்க வேண்டும். விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழகத்தில் ‘ஹைட்ரோ கார்பன்’ எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதந்தோறும் பென்‌ஷன் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தென்னிந்திய நதிகள் இணைப்புக் குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 84 விவசாயிகள் கடந்த 11 நாட்களாக தலைநகர் டெல்லியில் போராடி வருகிறார்கள்.

மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக தினமும் விதவிதமாக போராடுகிறார்கள். உத்தரபிரதேசம், பஞ்சாப், அரியானா உள்பட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கு எடுத்து செல்கின்றனர். எனினும் மத்திய அரசு விவசாயிகள் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் உள்ளது.

மனக்குமுறல்

இதுகுறித்து அய்யாக்கண்ணு மனக்குமுறலுடன் கூறியதாவது:–

தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டு, நெற் பயிர்கள் கருகியதை கண்டு 400 விவசாயிகள் துயரத்திலும், மனவேதனையிலும் மாண்டு போய் உள்ளனர். ஆனால் மத்திய அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது.

தமிழகத்தில் போராடினால் மத்திய அரசு கண்டுகொள்வதில்லை என்பதால், தலைநகர் டெல்லியில் கடந்த 11 நாட்களாக போராடி வருகிறோம். உண்ணாவிரதம், பிரதமர் வீடு முற்றுகை, தூக்கு கயிறு மாட்டுதல், ஆதிவாசி வேடம் அணிதல், நாமம் போடுதல், பட்டை அடித்தல், மொட்டை அடித்தல் என பல்வேறுவிதமாக போராட்டங்களை உடலை வறுத்தி முன் எடுத்துள்ளோம். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி எங்களை சந்திக்க மறுக்கிறார். அவர் விவசாயிகளை தீண்டத்தகாதவர்களாக கருதுகிறார்.

தற்கொலை முடிவு

நிதி மந்திரி அருண் ஜெட்லி கடந்த ஆண்டு கூறியதை போன்று, தற்போதும் பொறுத்திருங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று கூறுகிறார். ஓராண்டு பொறுத்து இருந்ததால் 400 விவசாயிகளுடைய உயிர் பறிபோய் இருக்கிறது. இன்னும் பொறுத்து இருந்தால் அடுத்த ஆண்டுக்குள் 4 லட்சம் விவசாயிகளுடைய உயிர் பறிபோய் விடும்.

மத்திய அரசு எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை இங்கிருந்து (டெல்லி) நகர மாட்டோம். மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியாது என்று பிடிவாதம் பிடித்தால், நாங்கள் ஒவ்வொரு விவசாயியும் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொள்வோம். இதை தவிர வேறு வழி இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசு வஞ்சிக்கிறது

மத்திய அரசு வழங்கியுள்ள நிவாரணம் குறித்து அவர் கூறும்போது, ‘ஆந்திர அரசு வறட்சி நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி கேட்டது. இதில் 25 சதவீதமாக மத்திய அரசு ரூ.500 கோடி வழங்கி உள்ளது. ஆனால் தமிழக அரசு ரூ.40 ஆயிரம் கோடி வறட்சி நிவாரணம் கேட்டும், மத்திய அரசு ரூ.1,748 கோடி மட்டுமே வழங்குகிறது. இது வெறும் 4 சதவீதம் மட்டுமே. இதன் மூலம் மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிப்பது தெள்ளத்தெளிவாகிறது’ என்றார்.

மேலும் செய்திகள்