பணப்பட்டுவாடா செய்ய எடுத்து சென்ற ரூ.20.80 லட்சம் பறிமுதல் அரசு அதிகாரி உள்பட 2 பேர் கைது

குண்டலுபேட்டை தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ய எடுத்து சென்ற ரூ.20.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2017-04-08 22:15 GMT

கொள்ளேகால்,

குண்டலுபேட்டை தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ய எடுத்து சென்ற ரூ.20.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு அதிகாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தீவிர வாகன சோதனை

மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு, சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தொகுதிகள் இடைத்தேர்தலையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி நஞ்சன்கூடு, குண்டலுபேட்டை பகுதியில் இடைத்தேர்தலுக்கான பணிகள் நடந்து வருகின்றன.

மேலும் பணப்பட்டுவாடாவை தடுக்க போலீசார் 2 தொகுதிகளை சுற்றியுள்ள சாலைகளில் சோதனை சாவடி அமைத்து தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

அரசு அதிகாரி கைது

இந்த நிலையில் நேற்று முன்தினம் குண்டலுபேட்டை டவுனில் உள்ள தனியார் ஓட்டலில் பகுதியில் நின்ற காரில் ஏராளமான பணங்கள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அந்தப்பகுதியில் நின்ற காரில், கட்டுக்கட்டாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதையடுத்து அந்த காரின் உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அப்போது அவர், வடகர்நாடகத்தில் செயல்பட்டு வரும் கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தின் இயக்குனர் மனோஜ் கார்ஜகி என்பதும், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய கட்டுக்கட்டாக பணத்தை கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.17.64 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்துகொண்டனர்.

பா.ஜனதா தொண்டர்

இதேபோல, குண்டலுபேட்டை அருகே இரிகாட்டி பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு வந்த கார் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் எந்தவித ஆவணங்கள் இன்றியும் பணம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து காரில் இருந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில், அவர் குண்டலுபேட்டையை சேர்ந்த பசவராஜ் என்பதும், பா.ஜனதா தொண்டரான இவர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பணத்தை கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த ரூ.3.16 லட்சத்தை பறிமுதல் செய்தனர். நேற்று முன்தினம் நடந்த வாகன சோதனையில் 2 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.20.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்