டெல்லி மாநகராட்சி தேர்தல்: சுக்மா தாக்குதல் காரணமாக வெற்றியை கொண்டாட வேண்டாம் பா.ஜனதா கோரிக்கை

டெல்லி மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் சுக்மா தாக்குதல் காரணமாக வெற்றியை கொண்டாட வேண்டாம் என பா.ஜனதா கோரிக்கை விடுத்து உள்ளது.

Update: 2017-04-26 03:55 GMT

புதுடெல்லி,

டெல்லியின் வடக்கு மாநகராட்சி, தெற்கு மாநகராட்சி, கிழக்கு மாநகராட்சிகளுக்கும் கடந்த 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் பா.ஜனதாவுக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை நிலவரப்படி பா.ஜனதா அமோக வெற்றியை நோக்கி பயணம் செய்கிறது என தெரிகிறது. வாக்கு எண்ணிக்கையில் அதிக இடங்களில் முன்னிலை பெற்று முதலிடம் பிடித்து உள்ளது. இரண்டாவது இடத்திற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே போட்டி நிலவுகிறது.

கொண்டாட வேண்டாம்

சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் கலபதர் என்னும் இடத்தில் நேற்று முன்தினம் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் படையினர் மீது நக்சலைட்டுகள் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினர். இதில் 25 சிஆர்பிஎப் வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

சுக்மாவில் உயிர் தியாகம் செய்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வெற்றியை கொண்டாட வேண்டாம் என தொண்டர்களுக்கு பா.ஜனதா கோரிக்கை விடுத்து உள்ளது. டெல்லி மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடங்க இருந்தநிலையில் இக்கோரிக்கையானது விடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்