மத்திய அரசு மீது விமர்சனம்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மீது தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மீது யமுனை நதி பாதுகாப்பு ஆர்வலர் மனோஜ் மிஸ்ரா தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.

Update: 2017-04-26 22:11 GMT
புதுடெல்லி,

ஆன்மிக தலைவரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு கடந்த ஆண்டு டெல்லியில் யமுனை நதிக்கரையோரம் உலக கலாசார திருவிழாவை நடத்தியது. இதனால் யமுனை நதியின் சமவெளிப் பகுதி பெருமளவில் சேதம் அடைந்திருப்பதாக புகார் எழுந்தது. இதை சீரமைப்பதற்கு ரூ.42 கோடி செலவு ஆகும் என்றும் இந்த தொகையை வாழும் கலை அமைப்புக்கு அபராதமாக விதிக்கவேண்டும் என டெல்லி பெருநகர வளர்ச்சி ஆணைய நிபுணர் குழு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

இதுபற்றி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் முகநூலில், ‘‘இதுபோல் அபராதம் விதிக்கப்படவேண்டும் என்றால் கலாசார விழாவுக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசுக்கும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கும்தான் விதிக்கவேண்டும். யமுனை நதியின் சமவெளி பலவீனமானது என்று கூறி இருந்தால் கலாசார திருவிழாவை தொடங்கும் முன்பாகவே நிறுத்தி இருப்போம்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

‘‘இது பசுமைத் தீர்ப்பாயத்தை அவமதிப்பது போல் உள்ளது. எனவே ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று கோரி யமுனை நதி பாதுகாப்பு ஆர்வலர் மனோஜ் மிஸ்ரா தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவரும் நீதிபதியுமான சுவதந்தர் குமார் முன்பாக இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

மேலும் செய்திகள்