தவறான தகவல் வெளியிட்டதாக கூறி மத்திய ரெயில்வே ஊழியர்கள் 3 பேர் பணி இடைநீக்கம்

மத்திய ரெயில்வே சமையல் பிரிவுக்கு பொருட்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்று இருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அம்பலமாகியது.

Update: 2017-05-04 21:15 GMT

மும்பை,

மத்திய ரெயில்வே சமையல் பிரிவுக்கு பொருட்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்று இருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அம்பலமாகியது. அதன்படி, 100 கிராம் தயிர் ரூ.972–க்கும், 1 லிட்டர் சமையல் எண்ணெய் ரூ.1,241–க்கும், 1 பாக்கெட் உப்பு ரூ.49–க்கும் வாங்கப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டிருந்தது.

அதாவது, பொருட்கள் அதிகபட்ச சில்லரை விலையில் இருந்து பல மடங்கு விலை கொடுத்து வாங்கப்பட்டு இருப்பது வெளிச்சத்துக்கு வந்து இருப்பது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால், உண்மையில் இதுமாதிரியான ஊழல் நடைபெறவில்லை என்றும், ரெயில்வே ஊழியர்களின் கவனக்குறைவால் தட்டச்சு பிழை காரணமாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், தவறான தகவல் வெளியாகிவிட்டதாகவும் மத்திய ரெயில்வே கோட்ட மேலாளர் ரவீந்திர கோயல் விளக்கம் அளித்தார்.

மேலும், இந்த தவறுக்கு காரணமான ரெயில்வே ஊழியர்கள் 3 பேரை பணி இடைநீக்கம் செய்திருப்பதாக அவர் கூறினார்.

மேலும் செய்திகள்