வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஜிசாட்-9, பிரதமர் மோடி வாழ்த்து

ஜிசாட் -9 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2017-05-05 11:59 GMT

சென்னை, 

பிரதமர் உத்தரவை ஏற்று, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள், ‘தெற்கு ஆசியா செயற்கைகோள்’ (ஜி-சாட் 9) உருவாக்கி உள்ளனர். இது ஒரு தகவல்தொடர்பு செயற்கைகோளாகும். இந்த செயற்கைகோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 4.57 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி-எப்09 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

இந்த செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது  குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்,  ஜி சாட் 9 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. சார்க் நாடுகளின் முன்னேற்றத்திற்கு ஜிசாட் -9 செயற்கைகோள் பெரிதும் உதவும்” என்று தெரிவித்துள்ளார்.

இது ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் 11-வது ராக்கெட்டாகும். இந்த செயற்கைகோளின் பயனை இந்த மண்டலத்தில் உள்ள பாகிஸ்தான் தவிர மற்ற அனைத்து சார்க் நாடுகளும் அடையும்.ஜி-சாட் 9 செயற்கைகோள் 2,230 கிலோ எடை கொண்டது. தகவல் தொடர்புக்கு உதவும் ‘12 கே.யு.பேண்ட்’ எந்திரங்களை சுமந்து செல்கிறது. இதனுடைய ஆயுள் காலம் 12 ஆண்டுகள். இந்த செயற்கைகோள், தகவல்தொடர்பு, தெற்கு ஆசிய நாடுகளில் உள்ள மாநிலங்களுக்கு பேரிடர் பற்றி முன்கூட்டியே தகவல்களை தெரிவிப்பது, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தகவல் திறனை அளிப்பது, மாநில நூலகங்களை இணைக்கும் திறன் கொண்டது.

மேலும் செய்திகள்