அரவிந்த் கெஜ்ரிவால் தனியார் நிறுவனத்திடம் ரூ. 2 கோடி லஞ்சமாக பெற்றார்: சுப்ரமணியன் சுவாமி புதிய குற்றச்சாட்டு

அரவிந்த் கெஜ்ரிவால் தனியார் நிறுவனம் ஒன்றிடம் ரூ. 2 கோடி லஞ்சமாக பெற்றதாக சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

Update: 2017-05-09 04:37 GMT
புதுடெல்லி,

டெல்லியில் ஆட்சியமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சி சமீபத்தில் அங்கு நடந்த மாநகராட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்தது. இது கட்சியினரை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியதுடன், கட்சிக்குள்ளேயும் அதிருப்தியை உருவாக்கியது. குறிப்பாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ், கட்சித்தலைமையை வெளிப்படையாக விமர்சித்தார்.

அவரை தொடர்ந்து மேலும் பல தலைவர்கள் கட்சித்தலைவர் கெஜ்ரிவாலுக்கு எதிராகவும், குமார் விஸ்வாசுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் மீது கெஜ்ரிவால் நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்தவகையில் குமார் விஸ்வாசின் ஆதரவாளர் என கருதப்படும் நீர்வளத்துறை மந்திரி கபில் மிஸ்ராவின் மந்திரி பதவி அதிரடியாக பறிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த கபில் மிஸ்ரா, ஆம் ஆத்மி தலைவர்கள் சிலரின் ஊழல் விவகாரங்களை அம்பலப்படுத்துவேன் என அறிவித்து இருந்தார். அதன்படி நேற்று அவர் கெஜ்ரிவாலுக்கு எதிராகவே ஊழல் குற்றச்சாட்டை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அரவிந்த் கெஜ்ரிவால் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக கபில் மிஸ்ரா குற்றம் சாட்டினார். கபில் மிஸ்ராவின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  கெஜ்ரிவாலுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க ஊழல் தடுப்பு பிரிவை  கவர்னர் அனில் பைஜால் கேட்டுக்கொண்டுள்ளார்.

இத்தகைய பரபரப்பான சூழலில் கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டை பாஜக மூத்த தலைவரும் எம்.பியுமான சுப்ரமணியன் சுவாமி முன் வைத்துள்ளார். சுப்ரமணியன் சுவாமி கூறியிருப்பதாவது:-”

டெல்லி முன்னாள் கவர்னர் நஜீப் ஜங், கெஜ்ரிவாலுடன் மறைமுகமாக இணைந்து செயல்பட்டார். அவர்கள் இடையே நடைபெற்ற மோதல் ஒரு நாடகம். கெஜ்ரிவாலுக்கு எதிராக விசாரணை நடத்த நான் நீண்ட காலமாக அனுமதி கேட்ட போது நஜீப் ஜங் அனுமதி தரவில்லை.  தனியார் நிறுவனத்திடம் கெஜ்ரிவால், ரூ.2 கோடி லஞ்சம் வாங்கினார். நான்கு தவணைகளில் ரூ.50 லட்சம் வீதம் இந்த  லஞ்சப்பணத்தை பெற்றார். இதற்காக அந்நிறுவனம் செலுத்த வேண்டி இருந்த  வாட் வரியை தள்ளுபடி செய்தார். கெஜ்ரிவாலுக்கு எதிராக வழக்கு தொடர கவர்னர் அனுமதி தருவார் என்று நம்பிக்கை உள்ளது.  ஆளுநர் அனுமதி தராவிட்டால், உச்ச நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடருவேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்