இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை: மத்திய அரசின் அரசாணைக்கு தடை விதிக்க கேரள ஐகோர்ட்டு மறுப்பு
மத்திய அரசின் அரசாணைக்கு தடை விதிக்க கேரள ஐகோர்ட்டு மறுத்து விசாரணையை வருகிற 26-ந்தேதிக்கு தள்ளி வைத்தது.;
கொச்சி,
சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு தடை விதித்து மத்திய அரசு அரசாணை பிறப்பித்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏராளமான மனுக்கள் கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த வாரம், இது தொடர்பான ஒரு பொது நல மனுவை பரிசீலனைக்கு ஏற்க கேரள ஐகோர்ட்டு மறுத்தது.
மத்திய அரசு தனது விளக்கத்தை கோர்ட்டில் தாக்கல் செய்த பின்பு, அதை ஆய்வு செய்த பிறகே தடைவிதிக்க கோரும் இதர மனுக்களை பரிசீலனைக்கு எடுத்து கொள்வது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அப்போது கூறியது.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது. அப்போது இந்த பிரச்சினையில் மத்திய அரசு தனது நிலைப்பாடு பற்றி கோர்ட்டுக்கு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. எனினும், மத்திய அரசின் அரசாணைக்கு தடை விதிக்க கேரள ஐகோர்ட்டு மறுத்து விசாரணையை வருகிற 26-ந்தேதிக்கு தள்ளி வைத்தது. அடுத்த விசாரணையின்போது அரசாணை தொடர்பாக மத்திய அரசு தனது பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.