‘சமுத்திர பிரதாப்’ கப்பலை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் ராஜ்நாத் சிங்
சமுத்திர பிரதாப் கப்பல் சுமார் 4,200 டன் எடை கொண்டது.;
கோவா,
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, 2 மாசு கட்டுப்பாட்டு கப்பல்களை உருவாக்கி உள்ளன. அதில் ஒரு கப்பலான ‘சமுத்திர பிரதாப்’ என்ற கப்பல் இந்திய கடலோர காவல்படையில் நேரடியாக இணைக்கப்படுகிறது. இதற்காக கோவாவில் இன்று (திங்கட்கிழமை) பிரமாண்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த கப்பல் கடலில் சிந்தும் எண்ணெய் கசிவுகளை கண்டறியவும், பிரித்து எடுக்கவும், பிசுபிசுப்பான எண்ணெயிலிருந்து மாசுகளை மீட்டெடுக்கவும் உகந்த தொழில்நுட்பங்களை கொண்டது. இது அதிக துல்லியமான செயல்பாடுகளை மேற்கொள்ளவும் திறன் படைத்தது. இந்தக் கப்பலில் 60 சதவீதத்திற்கு மேலாக உள்நாட்டு பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன, இது உள்நாட்டு கப்பல் கட்டுமானத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது.
சமுத்திர பிரதாப் கப்பல் 114.5 மீட்டர் நீளமும், சுமார் 4,200 டன் எடையும் கொண்டது. இது இந்திய கடலோர காவல்படைக் கப்பல்களில் மிகப்பெரிய கப்பலாகும். இது சுமார் 6,000 நாட்டிக்கல் மைல்கள் வரை தொடர்ந்து பயணிக்கும் திறன் கொண்டது.
தெற்கு கோவாவில் உள்ள ஷிப்யார்டு தளத்தில் இந்த கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து தொடங்கி வைக்கிறார். இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி மற்றும் பிற பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்கின்றனர்.