டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம்: என்.ஐ.ஏ. விசாரணையில் புதிய தகவல்
உயர் கல்வி கற்ற டாக்டர்கள் பலர் குழுவாக சேர்ந்து இந்த சம்பவத்தை அரங்கேற்றியது விசாரனையில் தெரியவந்தது.;
புதுடெல்லி,
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10-ந் தேதியன்று நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இந்த குண்டு வெடிப்பு பயங்கரவாத சம்பவத்தை உயர் கல்வி கற்ற டாக்டர்கள் பலர் குழுவாக சேர்ந்து அரங்கேற்றியது விசாரனையில் தெரியவந்தது.
இதில் அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல்பலா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த காஷ்மீரை சேர்ந்த கணாய் மற்றும் லக்னோவைச் சேர்ந்த ஷாஹீன் சயீத் ஆகிய 2 டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். காரை ஓட்டிச்சென்று குண்டு வெடிப்பை நிகழ்த்தி பலியான டாக்டர் உமர்-உன்-நபி மற்றும் கைது செய்யப்பட்ட டாக்டர்கள் போலி சிம் கார்டுகளை பயன்படுத்தி இந்த சம்பவத்தை நிகழ்த்தியது உறுதியாகியுள்ளது.
போலி ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட இந்த சிம்கார்டுகள் மூலம் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கார் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு முன்னதாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.