பிரிவினைவாத தலைவர் நாக்கை துண்டித்தால் ரூ.10 லட்சம் பரிசு பா.ஜ.க பிரமுகர் அறிவிப்பு

கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய பிரிவினைவாத தலைவர் மீர்வைஸ் நாக்கை துண்டித்தால் ரூ.10 லட்சம் பரிசு பா.ஜனதா பிரமுகர் அறிவித்துள்ளார்.

Update: 2017-06-23 03:07 GMT
போபால், 

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாம்பியன் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி தோற்கடித்தது. அதற்காக பாகிஸ்தான் அணிக்கு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் மீர்வைஸ் உமர் பாரூக் வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக, பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதற்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில், மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் கஜ்ராஜ் ஜாதவ், மீர்வைசின் நாக்கை துண்டிப்பவருக்கு பரிசு அறிவித்துள்ளார். இவர், பா.ஜனதாவில் எந்த பதவியும் வகிக்காவிட்டாலும், இவருடைய மனைவி பஞ்சாயத்து தலைவியாக இருக்கிறார். கஜ்ராஜ் ஜாதவ் கூறியதாவது:–

மீர்வைசின் செயல்கள், எனது உணர்வுகளை புண்படுத்தி விட்டது. ஆகவே, அவரது நாக்கை துண்டிப்பவருக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்குவேன். அவருக்கு பாகிஸ்தான் மீது காதல் இருந்தால், அவரும், அவரது குடும்பமும் அங்கேயே செல்லட்டும்.

பிரிவினைக்கு பிறகு, பாகிஸ்தானில் குடியேறிய முஸ்லிம்கள், அங்கே இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும். எப்போதும் நாட்டு நலனையே சிந்தித்த அப்துல் கலாமிடம் இருந்து இவரைப் போன்றவர்கள் பாடம் கற்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்