டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புகார்; கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு

தமிழக போலீசார் தங்களை மிரட்டி பேரம் பேசியதாக டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கர்நாடக போலீசாரிடம் புகார் செய்தனர்.

Update: 2017-09-14 00:00 GMT
குடகு

எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்படுமாறு தமிழக போலீசார் தங்களை மிரட்டி பேரம் பேசியதாக டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கர்நாடக போலீசாரிடம் புகார் செய்தனர். அதன்பேரில் கர்நாடக போலீசார் தமிழக போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விடுதியில் போலீசார் சோதனை

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் குஷால் நகரில் உள்ள ‘பெண்டிங் பான்’ எனும் தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்தநிலையில், நேற்று முன்தினம் கோவை மற்றும் நாமக்கல் போலீசார் அந்த விடுதிக்கு சென்று எம்.எல்.ஏ.க்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த காண்டிராக்டர் ராம. சுப்பிரமணியன் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பனிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் விடுதிக்கு சென்றதாக கூறப்பட்டது.

தமிழக போலீசார் மீது வழக்குப்பதிவு

இதற்கிடையே நேற்று மாலையில் சொகுசு விடுதியில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் வெளியே வந்தனர். அவர்களுடன் ஒரு வக்கீலும் இருந்தார். அவர்கள் விடுதியில் இருந்து சுண்டிகொப்பா போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.
பின்னர் அங்கிருந்த கர்நாடக போலீசாரிடம், தமிழக போலீசார் தங்களிடம் அத்துமீறி நடந்து கொண்டது குறித்தும், தங்களை மிரட்டி பேரம் பேசியது குறித்தும் கூறி புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட சுண்டிகொப்பா போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பான விசாரணையை நாளை(அதாவது இன்று) தொடங்குவதாக அவர்கள் எம்.எல்.ஏ.க்களிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி ஆகியோர் போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்து நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

பேரம் பேசினர்

நாங்கள்(எம்.எல்.ஏ.க்கள்) சொகுசு விடுதியில் தங்கி உள்ளது குறித்து அறிந்த தமிழக போலீசார் இங்கு சாதாரண உடையில் வந்தனர். அவர்கள் போலீஸ் வாகனங்களில் வராமல், தனியாருக்கு சொந்தமான வாகனங்களில்தான் வந்தனர். நேற்று (அதாவது நேற்றுமுன்தினம்) வந்து விசாரணையை முடித்துவிட்டு சென்ற அவர்கள், இன்று (நேற்று) காலையிலும் வந்து எங்களிடம் அத்துமீறி நடந்து கொண்டனர். எங்களை சோதனையிட்டனர். நாங்கள் தங்கியிருந்த அறைகளிலும் அத்துமீறி நுழைந்து தீவிர சோதனை நடத்தினர்.

பின்னர் மீண்டும் எங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கொடுக்கக்கூறி மிரட்டினர். ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை வாங்கித்தருவதாக பேரம் பேசினர். மேலும் ஆதரவு தரவில்லை என்றால் நீங்கள் ஏதாவது பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்றும் கூறி மிரட்டினர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பழனியப்பன் எம்.எல்.ஏ.
முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான பழனியப்பனிடம், காண்டிராக்டர் ராம.சுப்பிரமணியன் மர்ம மரணம் குறித்து விசாரிக்கவே போலீசார் அங்கு சென்றதாக கூறப்பட்டது. ஆனால் அங்கிருந்து பழனியப்பன் எம்.எல்.ஏ. கடந்த 2 நாட்களுக்கு முன்னதாகவே வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அவர் தனக்கு முக்கிய வேலை இருப்பதாக கூறிவிட்டு விடுதியில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்னதாகவே கார் மூலம் தமிழகத்திற்கு வந்து விட்டதாக தெரிகிறது.

மேலும் செய்திகள்