‘புளூவேல்’ விளையாட்டு தற்கொலைகள் பற்றி விசாரிக்க குழு டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்
புளூவேல் விளையாட்டால் ஏற்பட்ட தற்கொலைகள் குறித்து விசாரணை நடத்த பல்வேறுதுறை நிபுணர்கள் அடங்கிய உயர்மட்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.;
புதுடெல்லி,
இளம் வயதினரை தற்கொலைக்கு தூண்டும் ‘புளூவேல்’ விளையாட்டை தடை செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி, வக்கீ்ல் குர்மீத் சிங் என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனு தற்காலிக தலைமை நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் கூறியதாவது:-
‘புளூவேல்’ விளையாட்டால் ஏற்பட்ட தற்கொலைகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல்வேறுதுறை நிபுணர்கள் அடங்கிய உயர்மட்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. 30 நாட்களில் விசாரணை அறிக்கையை அக்குழு தாக்கல் செய்யும்.
மேலும், இணையதள நிறுவனங்களான கூகுள், யாகூ மற்றும் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்றவற்றில் இருந்து ‘புளூவேல்’ விளையாட்டு தொடர்பான இணைப்பை நீக்குமாறு கூறியுள்ளோம். அவையும் சம்மதித்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.