மாணவர் தலைவர் கொலை.. போராட்டங்கள்.. விசா நிறுத்தம் - இந்தியா - வங்கதேச பிரச்சனையில் என்ன நடக்கிறது?
இந்த நடவடிக்கை இரு நாடுகள் உறவை கடுமையாகப் பாதிக்கும் என்று கருதப்படுகிறது;
புதுடெல்லி,
இந்தியர்களுக்கு விசா வழங்கும் நடைமுறையைத் தவிர்க்க முடியாத காரணங்களால் நிறுத்திவைப்பதாக வங்கதேச தூதரகம் அறிவித்திருக்கிறது. வங்கதேசத்தின் இந்த நடவடிக்கை இரு நாடுகள் உறவை கடுமையாகப் பாதிக்கும் என்று கருதப்படுகிறது. என்ன நடந்தது?
ஷேக் ஹசீனா பதவியிழப்பு
வங்கதேச பிரதரமாக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அந்நாட்டில் கடந்த ஆண்டு ஜூலையில் பெரும் போராட்டங்கள் வெடித்தன. இந்தப் போராட்டங்களை ஒடுக்க ராணுவம் உள்ளிட்ட மொத்த கட்டமைப்பையும் ஷேக் ஹசீனா பயன்படுத்தினார். ஆனாலும், போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில் அவர் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இந்தப் போராட்டங்களில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தை அடுத்து வங்கதேசத்தில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்தார். இந்த சம்பவத்துக்குப் பிறகு இந்தியா -வங்கதேச உறவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
ஷெரீப் உஸ்மான் ஹாதி
ஷேக் ஹசீனாவுக்குப் பின்னர் வங்கதேசத்தில் முகமது யூனிஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது. இந்தநிலையில், ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டங்களின் முகமாக செயல்பட்டவர் ஷெரீப் உஸ்மான் ஹாதி. இன்குலாப் மாஞ்சா என்கிற அமைப்பின் மூலம் 2024 ஜூலையில் நடந்த போராட்டங்களை ஒருங்கிணைத்த இவர், 2026 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டிருக்கும் தேர்தலில் போட்டியிடத் தயாரானார். டாக்காவின் பிஜோய் நகர் பகுதியில் இருந்து சுயேச்சையாகப் போட்டியிட முடிவெடுத்திருந்தார். இந்தநிலையில், டாக்காவின் பிஜோய் நகர் பகுதியில் கடந்த 12-ம் தேதி பரப்புரையில் ஈடுபட்டிருந்த ஷெரீப், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மூன்று பேரால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
இதில் படுகாயமடைந்த ஷெரீப், அவசர சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு கிட்டத்தட்ட ஒருவார காலம் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் கடந்த 18-ம் தேதி உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை அடுத்து வங்கதேச மக்களிடையே உரையாற்றிய அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், அரசியல் அரங்கில் இது மிகப்பெரும் பின்னடைவு என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, வங்கதேசத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக இந்தப் போராட்டத்தில், மைமன் சிங் பகுதியைச் சேர்ந்த இந்தியரும் அங்கிருந்த தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தவருமான திபு சந்திர தாஸ் போராட்டக்காரர்களால் எரித்துக் கொல்லப்பட்டார்.
இந்தியாவில் போராட்டம்
இந்த சம்பவத்தை அடுத்து வங்கதேசத்துக்கு எதிரான போராட்டங்கள் இந்தியாவில் நடத்தப்பட்டன. குறிப்பாக, வங்கதேசத்தோடு எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மேற்குவங்க மாநிலத்தில் போராட்டங்கள் வலுத்தன. கொல்கத்தாவில் உள்ள வங்கதேச துணைத் தூதரகத்தின் முன்னர் அம்மாநில எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக மாநிலத் தலைவருமான சுவேந்து அதிகாரி தலைமையில் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டதோடு, வங்கதேச எல்லையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் பாஜக அறிவித்திருந்தது.
அதேபோல், வங்கதேச நாட்டைச் சேர்ந்த மக்களுக்கு விசா வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்துவதாக வங்கதேசத்தில் உள்ள இந்தியத் தூதரகம் நிறுத்தி வைப்பதாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) அறிவித்தது. சிட்டகாங்கில் நடந்த பாதுகாப்புப் பிரச்சனைகளை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில்தான், இந்தியர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைப்பதாக வங்கதேசம் அறிவித்திருக்கிறது. தவிர்க்க முடியாத சூழலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வங்கதேச தூதரகம் தெரிவித்திருக்கிறது. பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சர்வதேச நீதிமன்றத்தால் தண்டனை பெற்றிருக்கும் ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று அந்நாடு கோரிக்கை வைத்திருக்கும் நிலையில், அந்த கோரிக்கைக்கு இந்தியா செவிசாய்க்கவில்லை. அதேபோல், வங்கதேசத்தில் படித்து வரும் மருத்துவ மாணவர்கள் விவகாரத்தில் பிரதமர் மோடி நேரடியாகத் தலையிட்டு, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அகில இந்திய மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பு (AIMSA) வலியுறுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் அடுத்து என்னென்ன முடிவுகளை எடுக்கப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.