சிறுத்தையுடன் அரைமணி நேரம் போராடி தனது குழந்தையை மீட்ட தாய்

மத்திய பிரதேசத்தில் சிறுத்தையுடன் அரைமணி நேரம் போராடி தாய் ஒருவர் தனது குழந்தையை மீட்டு உள்ளார்.

Update: 2017-10-30 07:15 GMT


போபால்,

மத்திய பிரதேச மாநிலம் மோர்னா மாவட்டத்தில் உள்ள பைசாய் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆஷா. கடந்த வெள்ளிக்கிழமை அவர் தனது 2 வயது மகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.

சாலை வழியாக சென்றால் நேரமாகும் என்று நினைத்த அவர் அருகில் உள்ள அடர்ந்த காடு வழியாக நடந்து சென்றார். அப்போது திடீரென சிறுத்தைப்புலி ஒன்று புதருக்குள் இருந்து பாய்ந்து வந்தது.ஆஷா கையில் வைத்தி ருந்த அவரது 2 வயது மகளை கவ்வி இழுத்துச் செல்ல முயன்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆஷா அலறியபடி அங்கிருந்து ஓடினார்.

ஒரு கட்டத்தில் தாவி குதித்த அந்த சிறுத்தை புலி ஆஷாவின் குழந்தையை குறி வைத்து பாய்ந்தது. ஆனால் ஆஷா தன் குழந்தையை கைகளில் இறுகப் பிடித்துக் கொண்டார். மற்றொரு கையால் புலியுடன் போராடி னார்.

அப்போது புலியின் கழுத்துப் பகுதி ஆஷா கையில் சிக்கியது. அதை பிடித்து இறுக்கியபடி சுமார் 30 நிமிடம் அவர் போராடினார். இதனால் ஆவேசமான புலி ஆஷாவின் கை, கழுத்து பகுதிகளில் கடித்தது.

புலியின் தாக்குதல் அதிகரித்ததால் மகளை கீழே இறக்கி விட்ட ஆஷா அதனுடன் கடுமையாக போராடினார். அங்கு கிடந்த ஒரு கட்டையை எடுத்து சத்த மிட்டபடி புலியை அடித்தார். இதற்கிடையே அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடி வந்தனர். நிறைய பேர் வருவதை கண்டதும் புலி மிரண்டது. என்றாலும் ஆஷா புலியை அடிப்பதை நிறுத்தவில்லை. அவரது தாக்குதலால் நிலைகுலைந்த புலி தப்பி காட்டுக்குள் ஓடி விட்டது.

ஆஷாவையும், அவரது மகளையும் மீட்ட கிராமவாசிகள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆஷாவின் கழுத்து, தோளில் புலி கடித்த காயம் ஆழமாக ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மோர்னாவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்