சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் நுழைய முயன்ற இளம்பெண்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 18–ம் படிவரை வந்த ஒரு இளம்பெண், கோவிலுக்குள் நுழைய முயன்றபோது போலீசார் திருப்பி அனுப்பினர்.

Update: 2017-11-20 00:05 GMT

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவில், மண்டல பூஜைக்காக கடந்த 15–ந் தேதி நடை திறக்கப்பட்டது. நாடு முழுவதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

சபரிமலை கோவிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் நுழைய அனுமதி கிடையாது. பம்பையிலேயே போலீசார் பெண்களின் வருகையை கண்காணித்தபடி இருப்பார்கள். மேலே குறிப்பிட்ட வயதுடைய பெண்களை அவர்கள் திருப்பி அனுப்பி விடுவார்கள்.

ஆனால், ஆந்திர மாநிலத்தில் இருந்து குடும்பத்தினருடன் வந்த 31 வயதான ஒரு இளம்பெண், பம்பையில் போலீசாரின் கண்காணிப்பையும் மீறி மலை ஏறினார்.

கோவிலில் நுழைவதற்கு முன்பு உள்ள 18–ம் படியில் ஏறுவதற்கு முன்பு அந்த இளம்பெண்ணை போலீசார் பார்த்து விட்டனர். அவரது அடையாள அட்டையை கேட்டு வாங்கி பார்த்தனர். அதில், வயது 31 என்று இருந்தது.

எனவே, அவரை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறி, திருப்பி அனுப்பி விட்டனர். அவர் பம்பையில் போலீஸ் கண்காணிப்பை மீறி எப்படி மேலே வந்தார் என்பது புரியாத புதிராக இருப்பதாக கோவில் வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் செய்திகள்