12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் மரண தண்டனை அரியானாவில் புதிய சட்டம் கொண்டு வர முடிவு

அரியானாவில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிப்பவர்களுக்கு மரண தண்டனை. #DeathPenalty

Update: 2018-01-21 23:00 GMT
சண்டிகர்,

அரியானாவில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் விரைவில் இயற்றப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கற்பழிப்பு சம்பவங்கள்

அரியானாவில் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. மனோகர் லால் கட்டார் முதல்-மந்திரியாக உள்ளார்.

அம்மாநிலத்தில், சிறுமிகள் கற்பழிக்கப்படும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாதிருக்க தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தன.

மரண தண்டனை

இந்தநிலையில், 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிக்கும் நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும் என முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தெரிவித்து உள்ளார்.

கர்னல் நகரில் சர்க்கரை ஆலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட அவர், அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

விரைவில் சட்டம்

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிக்கும் குற்றவாளிகளை தூக்கில் போட வகை செய்யும் விதத்தில் புதிய சட்டம் மாநில அரசால் விரைவில் இயற்றப்படும்.

அதே சமயம் கற்பழிப்பு சம்பவங்களின் உண்மை தன்மையை உறுதி செய்யாமல், ஊடகங்கள் தவறான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பக்கூடாது. ஏனெனில் கடந்த ஆண்டில் பதிவான கற்பழிப்பு புகார்களில் 25 சதவீதம் பொய்யானவை.

சமூகத்திற்கும் பொறுப்பு

75 சதவீத கற்பழிப்பு சம்பவங்களில் குற்றவாளிகள், பாதிக்கப்பட்டோரின் உறவினர் அல்லது மிக நெருக்கமானவர்களாகவே உள்ளனர்.

எனவே இந்த விவகாரத்துக்கு தீர்வு காண்பதில் போலீசார் மட்டும் இன்றி சமூகத்திற்கும் முக்கிய பொறுப்பு உள்ளது.

அதனை உணர்ந்து மக்கள் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்