சமாஜ்வாடி, ஆம் ஆத்மி கட்சியினர் கடும் அமளி 2 முறை ஒத்திவைப்பு

உத்தரபிரதேசத்தின் காஸ்கஞ்ச் பகுதியில் கடந்த 26-ந்தேதி நிகழ்ந்த இனமோதலில் வாலிபர் ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2018-02-02 22:45 GMT
புதுடெல்லி,

உத்தரபிரதேசத்தின் காஸ்கஞ்ச் பகுதியில் கடந்த 26-ந்தேதி நிகழ்ந்த இனமோதலில் வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் கடுமையாக எதிரொலித்தது. இந்த மோதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாடி உறுப்பினர்கள் காலையில் அவை கூடியதும் சபையின் நடுப்பகுதிக்கு சென்று கோஷம் எழுப்பினர்.

இதைப்போல டெல்லியில் குடியிருப்பு பகுதிகளில் இயங்கி வரும் வணிக நிறுவனங்களை மூட மாநகராட்சி உத்தரவிட்டதை கண்டித்து ஆம் ஆத்மி உறுப்பினர்களும் அவையின் நடுவே சென்று அமளியில் ஈடுபட்டனர். மேலும் ‘ஆந்திராவுக்கு உதவுங்கள்’ என்ற வாசகம் அடங்கிய அட்டையை ஏந்திக்கொண்டு காங்கிரஸ் உறுப்பினர் ராமச்சந்திர ராவும் சபையின் நடுவே நின்றிருந்தார்.

இந்த அமளியால் சபை நடவடிக்கைகள் தொடர்வதில் குழப்பம் ஏற்பட்டது. எனவே மாநிலங்களவையை 12 மணி வரை துணைத்தலைவர் பி.ஜே.குரியன் ஒத்திவைத்தார். பின்னர் மீண்டும் சபை கூடிய போதும் இதே நிலைதான் நீடித்தது.

அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களுக்கு காங்கிரஸ் எம்.பி.க்களும் ஆதரவு தெரிவித்தனர். இந்த பிரச்சினை குறித்து விவாதிப்பதற்கு நோட்டீஸ் அளிக்குமாறு அவை துணைத்தலைவர் விடுத்த வேண்டுகோளை சமாஜ்வாடி உறுப்பினர்கள் ஏற்கவில்லை. எனவே சபை 2-வது முறையாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்