ரெயில் டிக்கெட் கட்டணம் உயரும் முறை அமலுக்கு வருகிறது

பண்டிகை காலங்களில் ரெயில் டிக்கெட் கட்டணம் தானாக உயரும் முறையை அமல்படுத்துவது பற்றி பரிசீலித்து வருவதாக ரெயில்வே மந்திரி பியுஷ் கோயல் கூறினார்.

Update: 2018-02-02 23:15 GMT
புதுடெல்லி,

பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ரெயில்களில் பின்பற்றப்படும் ‘பிளெக்சி கட்டணம்’ முறையை பற்றி பல உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். பா.ஜனதா உறுப்பினர் ராம் விச்சார் நேதம், இந்த கட்டண முறையால், சில நேரங்களில் கட்டணம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்று கூறினார்.

அதற்கு பதில் அளித்து, ரெயில்வே மந்திரி பியுஷ் கோயல் கூறியதாவது:-

ரெயில்களில் பிளெக்சி கட்டண முறைக்கு மாற்றாக ‘டைனமிக்’ கட்டண முறையை அமல்படுத்த வல்லுநர் குழு விரிவான அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதை பரிசீலித்து வருகிறோம்.

இந்த ‘டைனமிக்’ கட்டண முறை, ரெயில்களில் அதிக பயணிகள் பயணித்து, ரெயில்வேக்கு அதிக வருவாய் கிடைக்க வழி வகுக்கிறது. தேவைக்கு ஏற்ப கட்டணம் தானாக ஏறி, இறங்கும் தொழில்நுட்பம் இதில் பின்பற்றப்படும்.

இதன்படி, பண்டிகை காலங்களில் கட்டணம் அதிகமாக இருக்கும். மற்ற காலங்களில் கட்டணம் குறைவாக இருக்கும். அந்த மாதிரி சமயங்களில், கட்டண தள்ளுபடி கூட அளிக்கப்படும். பண்டிகை, தேவை, சப்ளை ஆகியவை அடிப்படையில் கட்டணம் அமையும்.

நாட்டில் 100 ஆண்டுகள் பழமையான சிக்னல் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. பனிமூட்டம் போன்ற சமயத்தில், ரெயில்கள் தாமதம் ஆவதற்கு இதுவே காரணம்.

ஆகவே, இந்த பழமையான சிக்னல் முறையை முற்றிலும் ஒழித்து விட்டு, நவீன தொழில்நுட்ப சிக்னல் முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில், 1 லட்சத்து 10 ஆயிரம் கி.மீ. தூரம் கொண்ட ரெயில் பாதையில் சிக்னல்கள் முற்றிலும் மாற்றி அமைக்கப்படும். இவ்வாறு பியுஷ் கோயல் கூறினார்.

மேலும் செய்திகள்