பஞ்சாப் நே‌ஷனல் வங்கி செயல் இயக்குனரிடம் 2–வது நாளாக சி.பி.ஐ. விசாரணை

பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் நடந்த மோசடி தொடர்பாக, அந்த வங்கியின் செயல் இயக்குனரிடம் 2–வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Update: 2018-02-25 22:30 GMT
புதுடெல்லி,

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நே‌ஷனல் வங்கி சார்பில் அளிக்கப்பட்ட போலி உத்தரவாத கடிதங்களை பயன்படுத்தி, பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய உறவினர் மெகுல் சோக்சியும் ரூ.11,700 கோடி மதிப்புள்ள கடன்களை வாங்கி மோசடி செய்துள்ளனர். இதுபற்றி சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த விவகாரம் குறித்து, பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் செயல் இயக்குனர் கே.வி.பிரம்மாஜி ராவிடம் நேற்று முன்தினம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

நேற்று 2–வது நாளாக, கே.வி.பிரம்மாஜி ராவிடம் விசாரணை நடந்தது. இவர், 35 ஆண்டுகளுக்கு முன்பு, விஜயா வங்கியில் புரொப‌ஷனரி அதிகாரியாக தனது வங்கிப்பணியை தொடங்கியவர்.

தற்போது, பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் மும்பை மண்டல பொறுப்பாளராக இருந்து வருகிறார். ரூ.50 கோடிக்கு மேற்பட்ட கடன்களை கண்காணிப்பதும் இவருடைய பணி ஆகும்.

இதுபற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘‘கே.வி.பிரம்மாஜி ராவை தவிர, வேறு சில அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தி வருகிறோம். குற்றம் எப்படி நடந்தது என்பதை கண்டறிவதையே முக்கிய நோக்கமாக கொண்டு விசாரணை நடத்துகிறோம்.

இதர நடைமுறை சார்ந்த பிரச்சினைகள், விதிமீறல்கள் ஆகியவை பற்றியும் கேட்டு வருகிறோம். அந்த அதிகாரிகளை குற்றம் சாட்டப்பட்டவர்கள் போல் நடத்தவில்லை’’ என்றனர்.

இதற்கிடையே, நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சிக்கு கொடுத்த அனைத்து கடன்கள் பற்றிய விவரங்களை அளிக்குமாறு 16 பொதுத்துறை வங்கிகளை அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

அந்த கடன்களின் தன்மை, கடனுக்கு ஈடாக காட்டப்பட்ட சொத்துகள் ஆகியவை பற்றிய விவரங்களையும் கேட்டுள்ளது. 16 பொதுத்துறை வங்கிகளிலும் நடந்த விதிமீறல்களை கண்டுபிடித்தால், மொத்த இழப்பு ரூ.20 ஆயிரம் கோடியை தாண்டும் என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் செய்திகள்