சிறார் பலாத்காரங்களில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் மசோதா ராஜஸ்தானில் நிறைவேறியது

சிறார்கள் பலாத்கார சம்பவங்களில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் மசோதா ராஜஸ்தான் சட்டசபையில் நிறைவேறியது. #DeathForRapists

Update: 2018-03-09 12:22 GMT


ஜெய்பூர்,

12 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட மசோதா ராஜஸ்தான் சட்டசபையில் நிறைவேறியது. ஏற்கனவே இதுபோன்ற சட்டம் மத்திய பிரதேச மாநில சட்டசபையில் கடந்த டிசம்பர் மாதம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து ராஜஸ்தான் சட்டசபையில் பேசிய அம்மாநில மந்திரி குலாப் சாந்த் காதாரியா பேசுகையில், மத்திய பிரதேசம் போன்று ராஜஸ்தானிலும் மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து அங்கு சட்ட மசோதா தயாரிக்கப்பட்டது, இன்று அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

தேசிய குற்ற ஆவண காப்பக (என்சிஆர்பி) 2016 அறிக்கையின்படி ராஜஸ்தான் மாநிலத்தில் சிறார்களுக்கு எதிரான குற்றமானது பரவலாக அதிகரித்து உள்ளது என காட்டியது. பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் ராஜஸ்தானில் 2016-ம் ஆண்டில் சிறார்களுக்கு எதிரான குற்றம் தொடர்பாக 4,034 வழக்குகள் பதிவாகி உள்ளது. நாடு முழுவதும் பதிவாகிய வழக்குகளில்  3.8 சதவிதமாகும். இதுவே கடந்த 2015-ம் ஆண்டில் சிறார்களுக்கு எதிரான குற்றம் தொடர்பாக ராஜஸ்தானில் 3,689 வழக்குகள் பதிவாகியிருந்தது. 

பாலியல் பலாத்காரம் மற்றும் கூட்டு பாலியல் பலாத்காரம் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் சட்டமாகும். 

மேலும் செய்திகள்