சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தரவரிசைப் பட்டியலில் இந்தியா மேலும் சரிவு, பாகிஸ்தானுடன் போட்டி

சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தரவரிசைப் பட்டியலில் இந்தியா மேலும் பின்தங்கி பாகிஸ்தானுடன் போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. #WorldPressFreedomIndex #India #Pakistan

Update: 2018-04-26 09:51 GMT

புதுடெல்லி,


உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா மீண்டும் சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தரவரிசைப் பட்டியலில் இரண்டு இடங்கள் பின்தங்கி 138 வது இடத்திற்கு இறங்கி உள்ளது. 2016-ம் ஆண்டில் இவ்வரிசையில் 133 வது இடம் பிடித்த இந்தியா தொடர்ச்சியாக சரிவையே சந்திக்கிறது. பயங்கரவாதம், பல்வேறு குழப்பங்களை எதிர்க்கொள்ளும் பாகிஸ்தான் 2017-க்கான தரவரிசையில் 139 வது இடத்தை பிடித்து உள்ளது. அதாவது இந்தியா, பாகிஸ்தானைவிட ஒரு இடம் மட்டுமே முன்னிலை பெற்று உள்ளது. 

180 நாடுகளில் பத்திரிக்கையாளர்களுக்கான சுதந்திரம், ஊடக ஒடுக்கு முறைகளை அடிப்படையாக கொண்டு ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் போர்டர்ஸ் (Reporters Without Borders – RSF) 2017-ம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டு உள்ளது.

இவ்வரிசையில் நார்வேயும், வடகொரியாவும் தங்களுடைய இடத்தை தக்கவைத்துக் கொண்டு உள்ளார்கள். சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தரவரிசைப் பட்டியலில் நார்வே முதலிடத்தையும், வடகொரியா கடைசி இடத்தையும் (180) பிடித்து உள்ளது. இந்தியா தொடர்ச்சியாக பின்னடைந்து வருகிறது. இந்தியாவில் முக்கிய ஊடங்களில் சுய தணிக்கை, மிகவும் தீவிரமான தேசியவாதிகள் பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் "ஆன்லைன் ஸ்மியர் பிரச்சாரங்கள்" காரணமாகவே இந்தியா பின்தங்கி உள்ளது எனவும் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
2017-ல் பெங்களூருவில் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொலை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி உள்ளது. இந்தியா 2016-ம் ஆண்டு 133 வது இடம் பிடித்தது. 2017-ம் ஆண்டு இவ்வரிசையில் 136 வது இடத்திற்கு பின்தங்கியது. இப்போதும் இரண்டு இடங்கள் பின்தங்கி உள்ளது. 

டிரம்ப் நிர்வாகத்தின் அறிக்கையில், “ 2017-ம் ஆண்டில் இந்தியாவில் அரசாங்கத்தை விமர்சித்த ஊடகங்களுக்கு அழுத்தம் அல்லது தொந்தரவு கொடுக்கப்பட்டு உள்ளது,” என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

“இந்திய அரசியலமைப்பு பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் வழங்குகிறது, ஆனால் பத்திரிக்கை சுதந்திரம் தொடர்பாக அதில் எந்தஒரு வரையறையும் கிடையாது. இந்திய அரசு பொதுவாக இந்த உரிமைகளுக்கு மதிப்பளிக்கிறது. இருப்பினும் அரசை விமர்சனம் செய்யும் ஊடகங்கள் அழுத்தம் அல்லது தொந்தரவை சந்திக்கும் நிகழ்வும் உள்ளது,” என 2017 ஆண்டுக்கான மனித உரிமைகள் அறிக்கையில் அமெரிக்கா இவ்வாறு குறிப்பிட்டு உள்ளது. தேசவிரோத எச்சரிக்கைகள் மற்றும் அதிகமான இந்து தேசியவாதம் ஆகியவை காரணமாகவே 2018-ல் தரவரிசையில் இந்தியா பின்தங்கியதற்கான காரணம் எனவும் ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் போர்டர்ஸ் சுட்டிக்காட்டி உள்ளது.

 இந்தியாவில் அரசை விமர்சனம் செய்யும் செய்தியாளர்களுக்கு எதிராக வழக்குகள் பிரயோகிக்கப்படுகிறது, தேச துரோக வழக்குகளும் பிரயோகப்படுத்தப்படுகிறது, இதனால் வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கமுடியும். இதுவரையில் எந்தஒரு செய்தியாளரும் தேச துரோக வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்படவில்லை, இது தணிக்கையை மேம்படுத்தும் விதமாக விடுக்கப்படும் எச்சரிக்கையாகும் என ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் போர்டர்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. காஷ்மீரில் அரசாங்கம், பாதுகாப்பு படைகள், பயங்கரவாதம், பொதுமக்கள், போதிய வசதியின்மை என பல்வேறு பிரச்சனைகள் இடையே செய்தியாளர்களின் பணிநிலையையும் பட்டியலிட்டு உள்ளது. 

இந்தியாவில் செய்தியாளர்கள் கொலை, நேரடியான தாக்குதல், மிரட்டல்கள் மற்றும் பல்வேறு நிலைகளில் இருந்து வரும் அழுத்தம் காரணமாக மீடியாக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. இந்தியாவில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ 21 செய்தியாளர்கள் கொலை செய்யப்பட்டு உள்ளனர் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்