பயங்கரவாதிகளின் தந்தை திலகர்; 8ம் வகுப்பு பாடபுத்தகத்தில் சர்ச்சை

8ம் வகுப்பு பாடபுத்தகத்தில் பயங்கரவாதிகளின் தந்தை பால கங்காதர் திலகர் என அச்சிடப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. #BalGangadharTilak

Update: 2018-05-12 05:18 GMT
ஆஜ்மீர்,

இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களில் முக்கியமானவராக பால கங்காதர திலகர் திகழ்கிறார். இந்நிலையில் 8ம் வகுப்பு சமூகஅறிவியல் ஆங்கில வழிக்கல்வி புத்தகத்தில் திலகரை ‘பயங்கரவாதிகளின் தந்தை என அச்சிடப்பட்டுள்ளது. இதனால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

திலகர், தேசிய இயக்கத்திற்கான பாதையை ஏற்படுத்திக் கொடுத்ததால் அவர் பயங்கரவாதத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார் என்று புத்தகத்தின் 22 பாடத்தில், 267வது பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இது திலகர் விபரம் என்ற பிரிவில் ’18 மற்றும் 19ம் நூற்றாண்டின் போது தேசிய இயக்கத்தின் சம்பவங்கள்’ என்ற துணை தலைப்பின் ஒரு பகுதியாக அச்சிடப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் அதிகாரிகளை கெஞ்சுவதன் மூலம் எங்களால் எதையும் சாதிக்க முடியாது என்று திலகர் கூறினார். மேலும் அவர் மக்களிடையே சுதந்திரம் எனும் மந்திரத்தை ஊக்குவித்தார். இதன் காரணமாக அவர் பிரிட்டிஷ் அரசின் பார்வையில் ஒரு முள்ளாக தோன்றினார் என்று அந்த புத்தகத்தில் மேலும் அச்சிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘திலகரை பயங்கரவாதத்தின் தந்தை என குறிப்பிட்டுள்ளது கண்டனத்திற்குரியது. பாட புத்தகங்களில் இடம்பெறும் வாசகங்களை எழுதுவதற்கோ அல்லது தயார் செய்வதற்கு முன்போ இத்தகைய சர்ச்சைக்குரிய வாசகங்களை மாற்ற வேண்டும். வரலாற்று ஆய்வாளர்களிடம் முதலில் கலந்து ஆலோசித்த பிறகு பள்ளி புத்தகங்களை அச்சிட வேண்டும்’ என்று  திலகர் பற்றிய இந்த சர்ச்சை வாசகம் தொடர்பாக தனியார் பள்ளி கழக இயக்குனர் கைலாஷ் சர்மா கூறினார்.

மேலும் செய்திகள்