கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணியில் மந்திரி பதவிக்கு போட்டா போட்டி: 2 துணை முதல்-மந்திரி பதவிகளை காங்கிரஸ் கேட்பதால் இழுபறி

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணியில் மந்திரி பதவிக்கு போட்டா போட்டி ஏற்பட்டு இருப்பதாலும், காங்கிரஸ் 2 துணை முதல்-மந்திரி பதவிகளை கேட்பதாலும் இழுபறி ஏற்பட்டு உள்ளது.

Update: 2018-05-21 23:00 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் சட்டசபை தேர்தலுக்கு பிறகு புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பாரதீய ஜனதாவைச் சேர்ந்த எடியூரப்பா, கடந்த சனிக்கிழமை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் முன்பே ராஜினாமா செய்தார்.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க முன்வந்ததால், புதிய அரசு அமைக்க வருமாறு ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தலைவர் குமாரசாமிக்கு கவர்னர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். அதை ஏற்று கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக குமாரசாமி நாளை பதவி ஏற்க இருக்கிறார்.

இதற்காக பெங்களூருவில் உள்ள விதான சவுதா முன்பு பிரமாண்டமான மேடை அமைக்கப்படுகிறது. பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

வியாழக்கிழமை சபாநாயகர் தேர்தலை நடத்தி விட்டு அன்றே சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க இருப்பதாக குமாரசாமி ஏற்கனவே அறிவித்து உள்ளார்.

காங்கிரசுக்கு 78 எம்.எல்.ஏ.க்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு 37 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். ஜனதா தளம் (எஸ்) கட்சியை விட 2 மடங்குக்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்களை வைத்து இருக்கும் காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காகத்தான் முதல்-மந்திரி பதவியை குமாரசாமிக்கு விட்டுக்கொடுத்து இருக்கிறது.

கர்நாடக சட்டசபையில் தற்போதுள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் முதல்-மந்திரி உள்பட 34 பேர் மந்திரிசபையில் இடம்பெற முடியும். கூட்டணி அரசில் இரு துணை முதல்-மந்திரி உள்பட 20 மந்திரி பதவிகளை பெறவும், மீதம் உள்ள 14 மந்திரி பதவிகளை ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு விட்டுக்கொடுக்கவும் காங்கிரஸ் முன்வந்து உள்ளது. அத்துடன் முக்கிய இலாகாக்களை பெறவும் முடிவு செய்து உள்ளது.

தலித் வகுப்பைச் சேர்ந்த கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரான பரமேஸ்வரப்பா எம்.எல்.ஏ. ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதால் அவருக்கும் மற்றும் தங்கள் கட்சியில் உள்ள லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் துணை முதல்-மந்திரி பதவி வழங்கவேண்டும் என்று காங்கிரஸ் வற்புறுத்தி வருவதாக தெரிகிறது.

லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பா முதல்-மந்திரி பதவியில் நீடிக்க முடியாமல் போனதால் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், எனவே அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு துணை முதல்-மந்திரி பதவி கொடுக்க வேண்டும் என்ற கருத்தும் பரவலாக உள்ளது.

இதுபற்றி பரமேஸ்வரப்பா கூறுகையில், காங்கிரஸ் சார்பில் இரு துணை முதல்-மந்திரி பதவிகள் கேட்கப்பட்டு இருப்பதாக கூறினார்.

ஆனால் குமாரசாமி காங்கிரசுக்கு ஒரு துணை முதல்-மந்திரி பதவியை கொடுக்க விரும்புவதாகவும், மேலும் முக்கிய இலாகாக்களை ஜனதா தளம் (எஸ்) வசமே வைத்துக்கொள்ள விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இதனால் மந்திரிகள் நியமனம் தொடர்பாக இழுபறி ஏற்பட்டு உள்ளது.

பாரதீய ஜனதாவின் வலையில் சிக்காமல் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை பாதுகாத்ததில் முக்கிய பங்கு வகித்தவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மந்திரி சிவக்குமார். எம்.எல்.ஏ.யான இவர், மந்திரிசபையில் தனக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்று கூறி உள்ளார். முக்கிய இலாகாவை எதிர்பார்த்தே அவர் இவ்வாறு கூறி இருப்பதாக கருதப்படுகிறது.

பொதுவாக இரு கட்சிகளிலும் உள்ள பல எம்.எல்.ஏ.க்கள் மந்திரி பதவிக்கு ஆசைப்படுவதால் கடும் போட்டா போட்டி ஏற்பட்டு உள்ளது.

மேலும் காங்கிரஸ் கட்சி சபாநாயகர் பதவியையும் கேட்கிறது. ஆனால் குமாரசாமி தங்கள் கட்சியை சேர்ந்தவரே சபாநாயகராக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்.

இதனால் மந்திரிகள் மற்றும் சபாநாயகர் நியமனம் தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. மேலும் எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த மந்திரி பதவி என்பதை தீர்மானிப்பதிலும் இன்னும் முடிவு ஏற்படவில்லை. இது தொடர்பாக இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி பெங்களூருவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாநில தலைவர் பரமேஸ்வரப்பா, கடினமான சவால்கள் நமக்கு காத்து இருக்கின்றன என்றும், அந்த சவால்களையும், சிரமங்களையும் சமாளித்து காங்கிரசை பலப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். கூட்டணி அரசை நடத்திச் செல்வதில் உள்ள சவால்களையே அவர் இப்படி மறைமுகமாக குறிப்பிட்டதாக கருதப்படுகிறது.

இதற்கிடையே, தேர்தல் முடிவு வெளியான கடந்த 15-ந் தேதியில் இருந்து, பாரதீய ஜனதா பக்கம் தாவி விடாமல் இருக்க காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்கள் பாதுகாப்பிலேயே வைக்கப்பட்டு உள்ளனர். எடியூரப்பா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருந்ததால், ஐதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு அழைத்து வரப்பட்ட அவர்கள், தொடர்ந்து அங்குள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அவர்களில் பலர், குடும்பத்தை பிரிந்து இருப்பது மிகவும் சிரமமாக இருப்பதாகவும், எனவே தங்களை வீட்டுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகிறார்கள். புதன்கிழமை முதல்-மந்திரியாக பதவி ஏற்கும் குமாரசாமி மெஜாரிட்டியை நிரூபிப்பதற்காக மறுநாள் வியாழக்கிழமை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருப்பதால் அதுவரை பொறுத்து இருங்கள் என்று கூறி, அவர்களை தலைவர்கள் சமாதானப்படுத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்