ரிசர்வ் வங்கி நடவடிக்கை எதிரொலி: வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள் உயர்ந்தது

குறுகிய கால கடன் வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி உயர்த்தியதை தொடர்ந்து வீட்டுக்கடன் வட்டி விகிதங்களை வங்கிகள் உயர்த்தி உள்ளன.

Update: 2018-06-07 23:15 GMT
புதுடெல்லி, 

கடன் வட்டி விகிதங்கள் குறித்த தனது கொள்கை முடிவுகளை ரிசர்வ் வங்கி நேற்றுமுன்தினம் வெளியிட்டது. இதில் குறுகிய கால வட்டி விகிதங்கள் 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டு இருந்தது. இதன் மூலம் ரெப்போ ரேட் 6.25 சதவீதமாக உயர்ந்தது. 4½ ஆண்டுகளுக்கு பிறகு இந்த வரி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு இந்த வட்டி விகித உயர்வு நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தலைமையிலான 6 நபர் குழு இந்த முடிவை எடுத்து இருந்தது.

10 புள்ளிகள் உயர்வு

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து 24 மணி நேரத்துக்குள் வங்கிகள் தங்கள் கடன் வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளன. குறிப்பாக பாரத ஸ்டேட் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எப்.சி. உள்ளிட்ட பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் அனைத்தும் தங்கள் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளன.

அதன்படி பல்வேறு குறுகிய கால கடன்களுக்கு, வட்டி விகிதத்தில் 10 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தி வங்கிகள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளன. இதில் இந்தியன் வங்கி 3 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரையிலான கடன்களுக்கு 10 அடிப்படை புள்ளிகளும், கரூர் வைசியா வங்கி 6 மாதம் முதல் 1 ஆண்டு வரையிலான கடனுக்கு இதே புள்ளிகளும் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

வங்கிகளின் இந்த வட்டி விகித உயர்வு நடவடிக்கையால் வீடு, வாகனங்கள் மற்றும் வணிக கடன்களுக்கான தவணைத்தொகை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்