நீதிபதி நியமனம் குறித்து விமர்சனம்: காங்கிரசுக்கு அருண் ஜெட்லி கண்டனம்

நீதிபதி நியமனம் குறித்து விமர்சனம் செய்த காங்கிரசுக்கு அருண் ஜெட்லி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2018-06-11 00:30 GMT
புதுடெல்லி, 

உத்தரகாண்ட் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப்பை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க, மத்திய அரசுக்கு கொலிஜியம் அமைப்பு பரிந்துரைத்தது. ஆனால் இந்த பரிந்துரையை மறுஆய்வு செய்யுமாறு மத்திய அரசு திருப்பி அனுப்பி விட்டது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் கட்சி, நீதித்துறையின் சுதந்திரத்தில் மத்திய அரசு தலையிடுவதாக குற்றம் சாட்டியது. இதற்கு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது பேஸ்புக் தளத்தில் அவர் கூறுகையில், ‘தற்போதைய நிலையில் கொலிஜியம் அமைப்புக்கு நிர்வாகத்தால் (அரசு) தகவல்களை கொடுக்க முடியும். கொலிஜியம் அளிக்கும் பரிந்துரையை தகுந்த தகவல்களின் அடிப்படையில் திருப்பி அனுப்பவும் முடியும். அப்படி தொடர்புடைய தகவல்களை கொலிஜியத்தின் கவனத்தில் கொண்டுவருவது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மிகவும் நீர்த்து போன பங்களிப்புகளில் ஒரு அங்கம்தான்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

எனினும் கடைசியில் கொலிஜியத்தின் பரிந்துரைப்படியே நியமனம் செய்யப்படுவதாக கூறியுள்ள ஜெட்லி, இது அரசியல் சாசன உரைக்கு நேர்மாறாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தீர்ப்புகளில் தலையிடுவதற்காக நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்ட நிகழ்வுகளையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்