கதுவா பலாத்கார, கொலை வழக்கு; சிறுவனின் வயதை உறுதிசெய்ய எலும்பு சோதனைக்கு நீதிமன்றம் உத்தரவு

கதுவாவில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சிறுவன் வயதை உறுதிசெய்ய எலும்பு சோதனைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. #KathuaCase

Update: 2018-06-12 15:09 GMT

பதன்கோட், 
 
காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி ஜனவரி மாதம் 10-ம் தேதி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவன் சிறுவன் என தெரிவிக்கப்பட்டது. கதுவா கோர்ட்டில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. அப்போது பல்வேறு இடையூறு ஏற்பட்டதால் இந்த வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்றுமாறு சுப்ரீம் கோர்ட்டில் சிறுமியின் தந்தை மனு செய்தார். இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வழக்கை பஞ்சாப் மாநிலம் பதான்கோட் கோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிட்டது.

அதன்படி சிறுமி கொலை வழக்கு பதான்கோட் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. சிறுமி பலாத்கார, கொலை வழக்கில் 7 குற்றவாளிகளுக்கு எதிராக பதன்கோட் நீதிமன்றம் குற்றச்சாட்டை பதிவு செய்து உள்ளது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட பர்வேஸ் குமாரை சிறுவனாக முன்னெடுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அவனது தரப்பில் வாதாடிவரும் வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவில் பர்வேஸ் குமாரின் பள்ளி சான்றிதழை சமர்பித்து உள்ளார். அதில் அவனுடைய பிறந்த தேதி பிப்ரவரி 22, 2000 என குறிப்பிடப்பட்டு உள்ளது.  
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பதன்கோட் நீதிமன்றம் குற்றவாளி சிறுவனின் வயதை கண்டறிய எலும்பு சோதனைக்கு உத்தரவிட்டு உள்ளது. ஜம்முவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சோதனையானது மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான அறிக்கையை ஜூலை 2-ல் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்