மலைப்பகுதிக்கு சென்று செல்பி எடுத்த பெண் 500 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து மரணம்

மலைப்பகுதிக்கு சென்று செல்பி எடுத்த பெண் 500 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து மரணம் அடைந்துள்ள சம்பவம் சுற்றுலாப்பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-06-21 09:22 GMT
மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை அருகே உள்ள ரைகாட் மாவட்டத்தில் புகழ்பெற்ற மலைப்பகுதிகள் உள்ளது. இந்த இடத்துக்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவது வழக்கம். லுசியா பாயிண்ட் என்ற இடத்தில் உள்ள மதேரன்  மலைப்பகுதி ஆழமான பள்ளத்தாக்குகளையும் கொண்டதாகும். 

இந்த சூழலில், டெல்லியைச்சேர்ந்த சரிதா சாம்மகேஷ் சவுகான் (வயது 33) என்ற பெண், மதேரன் மலைப்பகுதியை காண வந்தார். தனது கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் சரிதா சவுகான் வருகை தந்திருந்தார். மாலை 6.30 மணியளவில், லூசியா பாயிண்ட் என்ற இடத்திற்கு சென்ற  சவுகான், அங்குள்ள இயற்கை எழில் கொஞ்சும் அழகுகளை தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். அப்போது, செல்பி எடுக்க முயன்ற போது, தவறுதலாக சுமார் 500 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். 

இதைக்கண்ட குடும்பத்தினர், அதிர்ச்சியில் உறைந்து போயினர். தொடர்ந்து உள்ளூர் போலீசாரிடம் தகவல் அளித்ததும் மீட்பு பணிகள் நடைபெற்றன. இதையடுத்து, உள்ளூர் மக்களுடன் இணைந்து மீட்பு பணியை மேற்கொண்ட போலீசார் நள்ளிரவு சவுகான் உடலை மீட்டனர். செல்பி எடுக்க முயன்ற போது, பெண் தவறி விழுந்த சம்பவம் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

கடந்த 2015- ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, உலகில் செல்பி எடுக்கும் போது நிகழும் மரணங்களில் பாதிக்கும் மேலான சம்பவங்கள் இந்தியாவில்தான் நடைபெற்றுள்ளன. 

மேலும் செய்திகள்