சின்னசாமி கிரிக்கெட் மைதான குண்டுவெடிப்பு வழக்கு: பயங்கரவாதிகள் 3 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை

சின்னசாமி கிரிக்கெட் மைதான குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதிகள் 3 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

Update: 2018-07-09 22:00 GMT
பெங்களூரு,

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ந் தேதி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக மைதானத்தின் அருகே 2 குண்டுகள் வெடித்தன. இதில் 15 பேர் காயமடைந்தனர். மேலும், மைதானத்தை சுற்றி சோதனை நடத்திய போலீசார் 3 வெடிகுண்டுகளை கைப்பற்றி செயலிழக்க செய்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இந்திய முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த யாசீன் பட்கல் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட கவுகார் அஜிஸ் கோமணி, கமல்ஹாசன், முகமது காபீல் அக்தர் ஆகிய 3 பேரும் கடந்த 4-ந் தேதி பெங்களூரு தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி சித்தலிங்க பிரபு முன்பு ஆஜராகி குண்டுவெடிப்பில் தங்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறி குற்றத்தை ஒப்புக்கொண்டு, வாக்குமூலம் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் நேற்று தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது கவுகார் அஜிஸ் கோமணி, கமல்ஹாசன், முகமது காபீல் அக்தர் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சித்தலிங்க பிரபு உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்