குஜராத்தில் கனமழையால் 5 பேர் உயிரிழப்பு

குஜராத்தில் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு நேரிட்டுள்ளது.

Update: 2018-07-13 09:59 GMT
குஜராத்தில் பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. மாநிலத்தின் நவ்சாரி, வால்சாத் மற்றும் சூரத் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் மழை காரணமாக நேரிட்ட விபத்து சம்பவங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் நேற்றையில் இருந்து கனமழை பெய்வது காரணமாக 1000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும் 10 இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழு மீட்பு பணிகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு குஜராத் பிராந்தியத்தில் குறிப்பாக வால்சாத், நவ்சாரி மற்றும் சூரத் மாவட்டங்களில் கனமழை காரணமாக சாலைகள் மற்றும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரங்களில் நவ்சாரியில் 159 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குஜராத் மாநில கட்டுப்பாட்டு அறையின் தகவல்படி சவுராஷ்டிரா பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. மழை காரணமாக தெற்கு மற்றும் மத்திய குஜராத் பகுதிகளில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் உள்பட 197 சாலைகள் டிராபிக் காரணமாக முடங்கியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்றும் இப்பகுதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம், வால்சாத், சூரத் மற்றும் நவ்சாரி பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்