கேரள காதி பேஷன் ஷோவில் ஒய்யாரமாக நடந்து வந்த ஹனான் ஹமீத்

கல்லூரி உடையில் மீன் விற்பனை செய்த மாணவி ஹனான் ஹமீத்க்கு கேரளாவே துணை நிற்கும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-02 06:41 GMT
திருவனந்தபுரம்

எர்ணாகுளம் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி. படித்து வருபவர் ஹனான் ஹமீத். வறுமையான குடும்பத்தில் பிறந்த இவர் தன்னுடைய படிப்பு தேவைக்காக காலையிலும், மாலையிலும் கல்லூரிக்கு நேரத்திற்கு முன்னும் பின்னும் மீன் விற்கிறார். இவரை குறித்து மலையாள நாளிதழ் ஒன்று கட்டுரை வெளியிட்டது. கேரளா எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அவரது பேட்டி கட்டுரையை படித்து பாராட்டினார்கள்.

இவர் மீன் விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பிரபலமானதை தொடர்ந்து, இவரைப் பற்றி பல ஊடகங்களில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இவரை சமூக வலைதளங்களில் சிலர் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இதையடுத்து மனமுடைந்த ஹனான், சமூக வலைதளத்தில் தன்னை நிம்மதியாக வாழவிடுங்கள் என்று கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில், ஹனானை விமர்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். அதன் படி சமூக வலைதளங்களில் மோசமாக விமர்சித்த வயநாடு பகுதியைச் சேர்ந்த நூருதீன் ஷேக், குருவாயூரைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து ஹனான் கூறும்போது,  நான் இந்த அரசின் மகள். முதல்வர் பினராயி விஜயன் எனக்கு ஒரு தந்தையைப் போல் ஆதரவையும், பாதுகாப்பையும் அளிப்பதாக உறுதியளித்தார் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இதையடுத்து கேரள காதி வாரியம், ஓணம்-பக்ரீத் காதி விழாவை நேற்று நடத்தியது. இதில் நடந்த பேஷன் ஷோவில் காதியின் விதவிதமான உடைகளை அணிந்து ஹனான்  நடந்து வந்தார். முதலில் அவரை அடையாளம் தெரியாத பார்வையாளர்கள் பின்னர் தெரிந்து கொண்டதும் பலத்த கைதட்டி வரவேற்பை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்