அரசியல்வாதிகள் மீதான வழக்குகள் விவகாரம் : மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஊழல் வழக்குகளில் சிக்குகிற அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆயுள் கால தடை விதிக்க வேண்டும் என்று கோரி பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த அஷ்வினி உபாத்யாய், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தொடுத்து உள்ளார்.

Update: 2018-08-21 23:15 GMT
புதுடெல்லி,

நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வின் முன் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதில் அரசியல்வாதிகள் மீதான வழக்குகளை விசாரிக்க 12 தனிக்கோர்ட்டுகள் அமைக்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதன்படி 12 தனிக்கோர்ட்டுகள் அமைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் அந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘‘அமைக்கப்பட்டு உள்ள தனிக்கோர்ட்டுகள் செசன்ஸ் கோர்ட்டுகளா அல்லது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளா, அந்த கோர்ட்டுகளின் அதிகார எல்லை என்ன, தனிக்கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை என்ன, அவற்றில் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரிக்க தகுந்த வழக்குகள் எத்தனை, செசன்ஸ் கோர்ட்டில் விசாரிக்க தகுந்த வழக்குகள் எத்தனை என்பது குறித்த அனைத்து விவரங்களையும் அறிக்கையாக வரும் 28–ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும்’’ என மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்