கொல்கத்தா: மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து

கொல்கத்தாவில் உள்ள மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2018-09-16 21:00 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள பாக்ரி மார்க்கெட்டில் நேற்று முன்தினம் இரவு 2.30 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்கு சுமார் 400 கடைகள் அமைந்துள்ள 6 மாடி கட்டிடத்தில் திடீரென்று தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் அந்த கட்டிடத்தின் அனைத்து தளங்களுக்கும் தீ பரவி வேகமாக எரிய தொடங்கியது.

இது பற்றிய தகவல் கிடைத்ததும் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 30 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கொல்கத்தா மேயர் சோவன் சட்டர்ஜி, போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் ஆகியோர் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியை மேற்பார்வையிட்டனர். தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களில் 2 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்