5 ஆர்வலர்களும் மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு உள்ளதாக ஒரு ஆவணத்தை காட்டுங்கள் - சுப்ரீம் கோர்ட்டு

கைது செய்யப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு மாவோயிஸ்டுடன் தொடர்பு உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு ஆவணத்தை காட்டுங்கள் என போலீஸை சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக்கொண்டது.

Update: 2018-09-19 12:15 GMT
புதுடெல்லி

மாவோயிஸ்டு சிந்தனையாளர்கள் என கருதப்படும் வெர்னன் கோன்சால்வ்ஸ், அருண் பெரேரா, மனித உரிமை ஆர்வலர் கவுதம் நவலகா, புரட்சிகர இடதுசாரி எழுத்தாளர் வரவர ராவ், இடதுசாரி சிந்தனையாளரும், வக்கீலுமான சுதா பரத்வாஜ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

மராட்டிய போலீசின் இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கைது செய்யப்பட்ட 5 பேரையும் வீட்டுக்காவலில் வைக்குமாறு உத்தரவிட்டது. 

அவர்களுடைய வீட்டுக்காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மராட்டிய போலீஸ் அவர்களுக்கு மாவோயிஸ்டுடன் தொடர்பு உள்ளது, “அரசாங்கத்தை கவிழ்க்க விரும்பினர்” என தெரிவித்தது. இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது கைது செய்யப்பட்டவர்கள் மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் ஏதேனும் ஒரு ஆவணத்தை காட்டுங்கள் என்று மராட்டிய போலீசிடம் சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக்கொண்டது.

மேலும் செய்திகள்