ஜம்முவில் இடைவிடாது கொட்டி தீர்க்கும் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். #JammuLandslide

Update: 2018-09-24 07:27 GMT
ஜம்மு,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஹில்லி தோடா மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று குழந்தைகள் உட்பட 5 பேர் பலியாகினர். ஹில்லி தோடா மாவட்டத்திலுள்ள் கலி பாடோலி கிராமத்தில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

ஜம்மு மாநிலத்தில் தோடா உட்பட பல  பகுதிகளில் கடந்த இரு தினங்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. கனமழையால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கலி பாடோலி கிராமத்தில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு ஒன்று முற்றிலும் சேதமடைந்தது. இந்த துயர சம்பவத்தில் வீட்டிலிருந்த பஷீர் அகமத் (25), அவரது மனைவி நகீனா (23) , குழந்தைகள் சுல்ஃபி பானு (9), முகமது ஷரிஃப் (8) மற்றும் ஒன்றரை வயது குழந்தை ஆகியோர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். இதனிடையே உடனடியாக மீட்பு பணியில் கிராமத்தினர் ஈடுபட, சிறிது நேரத்தில் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

இதனிடையே ஜம்மு பகுதியில் தொடர்ந்து மழை நீடித்து வருவதால் மாநிலத்தின் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. மேலும் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும் செய்திகள்