23 சிங்கங்கள் உயிரிழப்பு: கிர் சரணாலயத்தில் இருந்து பரடாவுக்கு சிங்கங்களை மாற்ற குஜராத் அரசு முடிவு

23 சிங்கங்கள் அடுத்தடுத்து உயிரிழந்ததையடுத்து கிர் சரணாலயத்தில் இருந்து பரடாவுக்கு சிங்கங்களை மாற்ற குஜராத் அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2018-10-06 03:03 GMT

ஆமதாபாத்,

ஆசிய சிங்கங்களின் கடைசிப் புகலிடம் எனப்படும் கிர் சரணாலயம் குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டத்தில் உள்ளது. இது சிங்கங்களின் சரணாலயமாக உள்ளது. 1412 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தக் காடுகளில் சிங்கங்கள், வங்கப் புலிகள், சிறுத்தைகள் உள்ளன. 

2015-ம் ஆண்டு மே மாதம் மேற்கொண்ட 14வது ஆசியச் சிங்கங்களின் கணக்கெடுப்பின்படி, கிர் தேசியப் பூங்காவில் 523 சிங்கங்கள் கணக்கெடுக்கப்பட்டது. அவைகளில் ஆண் சிங்கங்கள் 109, பெண் சிங்கங்கள் 201 மற்றும் இளஞ்சிங்கங்கள் 213ஆக உள்ளது. இங்குள்ள சிங்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மற்ற மாநில வனப்பகுதியிலும் சிங்கத்தை வளர்க்க திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்கு குஜராத் அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் கடந்த மாதம் 14 சிங்கங்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டும், நோய்வாய்ப்பட்டும் உயிரிழந்தது. இதையடுத்து, நோய்வாய்ப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 9 சிங்கங்களும் இறந்ததால், உயிரிழந்த சிங்கங்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இந்த உயிரிழப்பு வனஉயிரின ஆர்வலர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிடிவி மற்றும் பேபிசோஸிஸ் என்னும் வைரஸ் தொற்றால் சிங்கங்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

இதையடுத்து, கிர் சரணாலயத்தில் இருந்து சிங்கங்களை போர்பந்தரில் உள்ள பரடா வன விலங்குகள் சரணாலயத்திற்கு இடம் மாற்ற குஜராத் அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் செய்திகள்