பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சன்னிதானத்துக்கு பாதி தூரம் சென்ற பெண் : தொடர்ந்து செல்ல முடியாமல் திரும்பினார்

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலையில் சன்னிதானத்திற்கு பாதி தூரம் வரை சென்ற 40 வயது பெண், அய்யப்ப பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் அவர் மேற்கொண்டு பயணம் செய்ய முடியாமல் திரும்பினார்.

Update: 2018-10-18 00:00 GMT
பம்பை,

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலையில் நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. இதனால் அதிக அளவில் அய்யப்பன் கோவிலுக்கு இளம் பெண்கள் வந்த வண்ணம் உள்ளனர். எனினும் அவர்கள் நேற்று அதிகாலை முதல் அய்யப்ப பக்தர்களால் நிலக்கல் மலை அடிவாரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதற்கிடையே, ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த மாதவி (40 வயது) என்பவர் நேற்று அதிகாலை தனது குடும்பத்தினருடன் சபரிமலைக்கு நிலக்கல் வழியாக பயணம் மேற்கொண்டார். அப்போது அங்கு இளம் பெண்களை தடுத்து நிறுத்தும் அய்யப்ப பக்தர்கள் மிகக் குறைவாகவே இருந்தனர். இதைப் பயன்படுத்தி அவர் போலீஸ் பாதுகாப்புடன் தனது குடும்பத்தினருடன் அங்கிருந்து வாகனம் மூலம் எளிதில் பம்பைக்கு சென்றுவிட்டார்.

பம்பையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில்தான் அய்யப்பன் கோவில் சன்னிதானம் உள்ளது. அப்போது தகுந்த பாதுகாப்பு தருவதாகவும், பயணத்தை தொடரலாம் என்றும் மாதவியிடம் போலீசார் தெரிவித்தனர்.

இதனால் அவரும், அவருடைய குடும்பத்தினரும் போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து மலைப்பாதை வழியாக நடந்து சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்து விடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

சன்னிதானத்தை நோக்கி பாதி தூரம் நடந்து சென்ற நிலையில் மாதவியையும், அவருடைய குடும்பத்தினரையும் அய்யப்ப தர்ம சேனா அமைப்பினர் பெருமளவில் சூழ்ந்து கொண்டனர்.

அவர்கள், திரும்பிப் போ என்று தொடர்ந்து கோஷங் களை எழுப்பினர். மேலும் மாதவி குடும்பத்தினர் முன்னேறி செல்லாமல் வழி மறித்தனர். போலீசார் பாதுகாப்பு அளித்தபோதும் அவர்களால் மேற்கொண்டு பயணத்தை தொடர முடியவில்லை.

இதனால் வேறு வழியின்றி சபரிமலைக்கு செல்வதை கைவிட்டு மாதவியும், அவருடைய குடும்பத்தினரும் மீண்டும் பம்பைக்கே திரும்பினர்.

மாதவி, சபரிமலை கோவிலுக்குள் சென்று இருந்தால் அய்யப்பனை வழிபட்ட 50 வயதுக்கு உட்பட்ட முதல் பெண் என்ற சாதனைக்கு உரியவராகி இருப்பார்.

மேலும் செய்திகள்