நாளை சபரிமலை நடைதிறப்பு: 1,500 போலீசார் குவிப்பு, கமாண்டோ படையும் விரைவு

நாளை நடை திறக்கப்படுவதால் சபரிமலையில் 1,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்கு கமாண்டோ படையும் விரைந்தனர்.

Update: 2018-11-03 18:30 GMT
சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அங்கு ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த மாதம் நடை திறக்கப்பட்ட போது பெண்களை அனுமதிக்க மறுத்து போராட்டம் வெடித்தது.

இந்த நிலையில் மாதாந்திர பூஜைக்காக நாளை (திங்கட்கிழமை) சபரிமலையின் நடை திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு மற்றும் தலைமை அர்ச்சகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோர் நடை திறந்து விளக்கேற்றுகிறார்கள்.

சபரிமலை சன்னிதானம், நிலக்கல் மற்றும் பம்பை உள்ளிட்ட இடங்களில் கடந்த மாதம் கடும் போராட்டங்கள் நடந்ததால், மீண்டும் அங்கு போராட்டம் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அங்கு எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் நோக்கில் சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இதற்காக 1,500 போலீசார் சபரிமலையில் குவிக்கப்பட்டு உள்ளனர். இதில் 100 பெண் போலீசாரும் அடங்குவர். இதைப்போல 20 பேர் கொண்ட கமாண்டோ படையும் நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதானம் பகுதியில் நிறுத்தப்பட உள்ளனர். இதற்காக அவர்கள் சபரிமலை விரைந்துள்ளனர்.

இதற்கிடையே சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து மாநில பா.ஜனதா தலைவர் ஸ்ரீதரன் பிள்ளைக்கு கொலை மிரட்டல் வந்திருப்பதாக பா.ஜனதா கூறியுள்ளது.

மேலும் செய்திகள்