விமானியின் தவறால் விமான கடத்தல் பீதி - டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு

விமானியின் செய்த தவறு காரணமாக ஏற்பட்ட விமான கடத்தல் பீதியால் டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

Update: 2018-11-10 18:16 GMT
புதுடெல்லி,

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்றுபிற்பகல் 3.30 மணிக்கு ஆப்கானிஸ்தான் நாட்டின் காந்தஹாருக்கு ஏரியானா ஆப்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாரானது. அதில், 124 பயணிகளும், 9 சிப்பந்திகளும் இருந்தனர். விமானம் மேலே கிளம்புவதற்காக ஊர்ந்து சென்று கொண்டிருந்தபோது, விமான கடத்தலின்போது பயன்படுத்தப்படும் எச்சரிக்கை பொத்தானை விமானி தவறுதலாக அழுத்தி விட்டார்.

இதனால், விமானம் கடத்தப்படப்போவதாக பீதி ஏற்பட்டது. விமான நிலையத்தில் இருந்த தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு அமைப்புகளின் அதிகாரிகளும் விமானத்தை சூழ்ந்து கொண்டனர். விமானம், தனி இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

விமானத்துக்குள் நுழைந்து அதிகாரிகள் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். 2 மணி நேரம் சோதனை நீடித்தது. விமானிதான் தவறுதலாக பொத்தானை அழுத்தினார் என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு, விமானம் புறப்பட அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர், விமானம் புறப்பட்டு சென்றது.


மேலும் செய்திகள்