டெல்லியில் விமானத்தை இயக்க போதையில் வந்த விமானி - பரிசோதனையில் சிக்கினார்

டெல்லியில் விமானத்தை இயக்க வந்த விமானி, பரிசோதனையின் போது போதையில் இருந்ததாக சிக்கினார்.

Update: 2018-11-11 21:15 GMT
மும்பை,

விமான விதிமுறை சட்டம் 24-ன் படி விமானம் புறப்படுவதற்கு முந்தைய 12 மணி நேரத்துக்குள் விமானிகள் மது அருந்துவது குற்றமாகும். எனவே விமானத்தை இயக்குவதற்கு முன்னும், இறங்கிய பின்னும் விமானிகளுக்கு போதை பரிசோதனை நடத்துவது வழக்கம்.

அந்தவகையில் நேற்று டெல்லியில் இருந்து லண்டன் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானத்தை இயக்குவதற்காக வந்த விமானி ஏ.கே.கத்பாலியாவுக்கு போதை பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அவர் மது அருந்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

முதல் பரிசோதனையில் அவர் சிக்கியதால், மீண்டும் அவருக்கு அந்த பரிசோதனை நடத்தப்பட்டது. அதிலும் அவர் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் விமானத்தை இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. இவர் ஏர் இந்தியாவின் இயக்குனராகவும் (செயலாக்கம்) இருக்கிறார்.

முன்னதாக கடந்த 2017-ம் ஆண்டிலும் இதுபோன்ற சர்ச்சையில் அவர் சிக்கி இருந்தார். அப்போது இந்த சோதனையில் பங்கேற்காமல் அவர் சென்று விட்டது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவரது விமான இயக்க லைசென்சை அதிகாரிகள் 3 மாதங்களுக்கு முடக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்