சபரிமலை விவகாரம்: பினராயி விஜயன் மீது கேரள காங். தலைவர் சென்னிதலா கடும் விமர்சனம்

அய்யப்ப பக்தர்கள் கைது செய்யப்பட்டதற்கு கேரளா காங்கிரஸ் தலைவர் சென்னிதலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-19 07:27 GMT
கொச்சி, 

சபரிமலை அய்யப்ப பக்தர்கள் மீது போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கேரள எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் தலைவருமான சென்னிதலா, கேரளாவில் நடப்பது ஹிட்லர் ஆட்சியா? என கடுமையாக விமர்சித்துள்ளார். 

கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னிதலா கூறியதாவது:- “ அப்பாவி பக்தர்களும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அய்யப்ப பக்தர்கள் அனைவரும் சங் பரிவார் இயக்கத்தைச்சேர்ந்தவர்கள் என முத்திரை குத்த பினராயி விஜயன் அரசு முயற்சிக்கிறது.  சபரிமலையில் வழிபாடு நடத்திய பக்தர்களை இரவோடு இரவாக கீழே இறங்குமாறு போலீஸார் நிர்பந்தித்தது கண்டிக்கத்தக்கது. அவர்களை வலுக்கட்டாயமாக கீழே இறக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். கேரளாவில் நடப்பது ஹிட்லர் ஆட்சி. போராட்டக்காரர்களை கைது செய்துகிறோம் என்ற பெயரில் அப்பாவி பக்தர்களை துன்புறுத்தும் போலீஸாரின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

பிரச்சினை என்ன?

சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானத்தில் நேற்று இரவு தரிசனம் முடித்து வெளியே வந்த பக்தர்களை உடனடியாக மலையை விட்டு கீழே இறங்குமாறு போலீசார் உத்தரவிட்டனர். இதற்கு பக்தர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இரவு நேரத்தில் மலையை விட்டு இறங்க வாய்ப்பில்லை எனவும், காலையில் தான் இறங்க முடியும் எனவும் தெரிவித்தனர். ஆனால் பக்தர்கள் சிலரை போலீஸார் வலுக்கட்டாயமாக கீழே இறக்க முற்பட்டனர். இதையடுத்து போலீஸாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களில் 70 பக்தர்கள் கைது செய்யப்பட்டனர். பக்தர்கள் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பல்வேறு இடங்களில் போராட்டம் நீடித்தது. 

மேலும் செய்திகள்