சபரிமலை கோவிலில் 15,000 போலீசார் குவிப்பு ஏன்? கேரள அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

சபரிமலை கோவிலில் 15,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளது ஏன்? என்று கேரள அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வியை எழுப்பியுள்ளது.

Update: 2018-11-19 14:16 GMT
திருவனந்தபுரம்,

சபரிமலையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சபரிமலை கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக அக்டோபரில் திறக்கப்பட்ட போது பெண்கள் செல்வதற்கு முயற்சி செய்தார்கள். அப்போது போராட்டம் நடைபெற்றதால் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதனையடுத்தும் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தொடர்கிறது. 

இதுவரையில் இதுதொடர்பாக 529 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 3,505 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பக்தர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை தொடர்பாக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வியை எழுப்பியுள்ளது. “சபரிமலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு என்ற பெயரில் இதுபோன்று போலீஸ் எப்படி செயல்பட முடியும்?” என கேள்வியை எழுப்பியுள்ளது. பக்தர்கள் மீது போலீஸ் மேற்கொண்ட தடியடி நடவடிக்கை தொடர்பான வழக்கை விசாரிக்கும் ஐகோர்ட்டு, “சபரிமலை கோவிலில் 15,000 போலீசாரை குவிக்க வேண்டிய அவசியம் என்ன?” எனவும் கேள்வியை எழுப்பியுள்ளது. மாநில உயர் சட்டத்துறை அதிகாரியை கோர்ட்டில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை கோவிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதியில் உள்ள குறைபாடு தொடர்பாகவும் கேள்வியை எழுப்பியுள்ளது ஐகோர்ட்டு. 

மேலும் செய்திகள்