சபரிமலையில் பெண்கள் தரிசனத்திற்காக இரண்டு நாட்கள் ஒதுக்கலாம் ஐகோர்ட்டில் கேரள அரசு தகவல்

சபரிமலையில் பெண்கள் தரிசனத்திற்காக மட்டும் இரண்டு நாட்களை ஒதுக்கலாம் என ஐகோர்ட்டில் கேரள அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2018-11-23 13:06 GMT

திருவனந்தபுரம்,


சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. சபரிமலையில் தற்போது மகரவிளக்கு–மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ள நிலையில், அங்கு போராட்டங்களை தடுப்பதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்களுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன.

சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராகவும், அங்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் தொடர்கிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அடுத்து கோவிலுக்கு செல்லும் பெண்களின் முயற்சி பயனளிக்கவில்லை. அங்கு பாதுகாப்பும், கட்டுபாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது பக்தர்களுக்கு மிகவும் நெருக்கடியான நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி எங்களை அனுமதிக்க வேண்டும் என்று 4 பெண்கள் வலியுறுத்தியுள்ளனர். கோவிலுக்கு கண்டிப்பாக செல்வோம், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்து கொடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதுதொடர்பான வழக்கை விசாரிக்கும் ஐகோர்ட்டு பெஞ்சில் தன்னுடைய பரிந்துரையை தாக்கல் செய்துள்ள கேரள மாநில அரசு, கோவில் பெண்களுக்கு என்று பிரத்யேகமாக இருநாட்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. தேவசம் போர்டு உடன் ஆலோசனையை மேற்கொண்டு எந்த நாட்களில் அனுமதிக்கலாம் என்ற தேதியை முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது. முன்னதாக சபரிமலை கோவில் பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சிகள் கூட்டத்தின்போது பெண்களுக்கு மட்டும் என்று குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கும் முறையை அரசு பரிந்துரை செய்தது. ஆனால் பிறக்கட்சிகள் அதனை ஏற்கவில்லை. இதே பரிந்துரையை ஐகோர்ட்டிலும் அரசு வைத்துள்ளது. 

மேலும் செய்திகள்