ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்தை கைது செய்ய டிச.18-ஆம் தேதி வரை தடை

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய டிசம்பர் 18-ஆம் தேதி வரை தடையை நீட்டித்து டெல்லி சிபிஐ தலைமை நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2018-11-26 10:12 GMT
புதுடெல்லி

கடந்த 2006-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது, ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்ய மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

ரூ.600 கோடி வரை முதலீடு செய்ய மத்திய நிதி அமைச்சகத்தால் அனுமதி அளிக்க முடியும் என்ற நிலையில், விதிகளை மீறி முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதில் அனுமதி பெற்று கொடுக்க கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் முறைகேடாக பணம் பெற்றதாக சிபிஐ குற்றம் சாட்டியது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறையும், ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த வழக்கை சிபிஐயும் விசாரித்து வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 19-ம் தேதி சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

அந்தக் குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதையடுத்து சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை விசாரித்து வந்த அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குற்றம் செய்ததற்கான முகாந்திரம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய டிசம்பர் 18-ம் தேதி வரை தடையை நீட்டித்து டெல்லி சிபிஐ தலைமை நீதிபதி ஓ.பி. சைனி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்